விழுப்புரம்

அரசு கல்லூரி முன்பு விரிவுரையாளர்கள் தர்ணா-விடியா அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் அரங்கேறிய அவலம்

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மீண்டும் நேர்முக தேர்வு வைத்து பணியில் சேர்த்து கொள்ளப்படும் என கூறப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த கவுரவ விரிவுரையாளர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட போவதாக கூறி தர்ணா போராட்டம் செய்தனர். விடியா அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் தான் இந்த அவலம் அரங்கேறியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. விடுமுறைக்கு பிறகு நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த கல்லூரியில் 60 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று காலை 10 மணிக்கு வந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு வரும் 20-ம்தேதி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நேர்முகத்தேர்வு நடத்தி மீண்டும் பணியில் சேர்க்க படுவதாகவும் அதுவரை வருகை பதிவேட்டில் கையொப்பம் இட வேண்டாம் எனவும் கல்லூரி முதல்வர் நாகலட்சுமி தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த கல்லூரி விரிவுரையாளர்கள் கல்லூரி வாயில் படியில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது:-

கடந்த 2018-2019-ம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள 41 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரியாக அறிவித்தது. ஏற்கனவே நியமித்த கவுரவ விரிவுரையாளர்களை நீக்கக்கூடாது எனவும், அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. நேற்று அனைத்து கல்லூரிகளும் தமிழகத்தில் திறக்கப்பட்டன.

அனைத்து கல்லூரிகளிலும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி செய்கின்றனர். ஆனால் இந்த கல்லூரியில் மட்டும் கல்லூரி நிர்வாகம் கவுரவ விரிவுரையாளர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நேர்முகத்தேர்வு நடத்தி மீண்டும் சேர்க்கப்படுவதாகவும் அதுவரை கையொப்பமிட வேண்டாம் கூறுகின்றார்.

நாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கல்லூரியில் பணிபுரிந்து வருகின்றோம். திடீரென இதுபோன்று சொல்வதால் நாங்கள் வேலை இழக்கக்கூடும். இதனால் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

கல்லூரிக்கு நிரந்தர முதல்வரை நியமிக்க வேண்டும். தற்போதுள்ள பொறுப்பு கல்லூரி முதல்வரால் சரியாக செயல்பட முடியவில்லை. எங்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தக்கூடாது என்று தெரிவித்தனர்.

இதுபற்றி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேறுவழியின்றி போராட்டத்துக்கு அமைச்சர் அடிபணிந்தார். இதையடுத்து வருகைப்பதிவேட்டில் கையொப்பம் இட்டு பணியில் சேருமாறு கூறப்பட்டது. இதையடுத்து கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது