தற்போதைய செய்திகள்

சீரான மின்சாரத்தை விநியோகிக்க தி.மு.க. அரசுக்கு வக்கில்லை-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை

மின்சாரம் இருந்தும், திறமையின்றி செயல்பட்ட மின்சார வாரியம், பொதுமக்களுக்கு சீரான மின்சாரத்தை விநியோகிக்க வக்கில்லை. மின்கட்டணத்தை உயர்த்தி விட்டு மத்திய அரசின் மீது போடுகிறார்கள் என்று விடியா தி.மு.க. அரசை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடுமையாக தாக்கி உள்ளார்.

கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேற்று பசுமை வழி சாலையில் உள்ள மனித உரிமைகள் ஆணையம் அருகே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி : தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதே.

பதில்: சீரான மின்சாரத்தை வழங்க இவர்களுக்கு வக்கில்லை. எங்கள் ஆட்சி காலத்தில் தங்கு தடையில்லா சீரான மின்சாரத்தை வழங்கினோம். ஆனால் 2014-ம் ஆண்டிலிருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை. 2016-ம் ஆண்டு கட்டணத்தை உயர்த்தினாலும் கூட சலுகையையும் அளித்தோம். 100 யூனிட் வரை இருந்தால் விலையில்லா மின்சாரத்தை அளித்தோம். இது எப்படி எங்களால் முடிந்தது. அம்மா அவர்களின் நல்ல நிர்வாகத்தை நடத்தியதால் இது சாத்தியமாயிற்று.

இவர்கள் மத்திய அரசின் மீது பழியை போடுகிறார்கள். 2014-ம் ஆண்டு இதே காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி மத்திய அரசில் இருந்த போது அன்றைக்கு இதேபோலத்தான் ஒரு கடிதம் எழுதினார்கள். நீங்கள் மின்சார கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் நாங்கள் உங்கள் அளிக்கும் மானியத்தை ரத்து செய்து விடுவோம் என்று தெரிவித்தார்கள்.

நாங்கள் அதற்காக பயந்து விட்டோமா. பயப்படவில்லையே. நீங்கள் கட் செய்தால் செய்யுங்கள். ஆனால் அந்த சுமையை மக்கள் தலையில் நாங்கள் ஏற்றமாட்டோம் என்று தெரிவித்தோம். இப்படி தெரிவித்துவிட்டு ஒரு சீரான மின்சாரத்தை மக்களுக்கு சுமை இல்லாத வகையிலே, மின் கட்டணத்தையும் உயர்த்தாமல் நல்ல அளவுக்கு நிர்வாகம் நடைபெற்றதாக இல்லையா. மின்கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்கள்.

இதற்கு மட்டும் மத்திய அரசு குறித்து பேசும் நீங்கள் மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைத்ததே. அதற்கு இணையாக நீங்கள் ஏன் விலையை குறைக்கவில்லை. இப்போது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் எல்லோரும் மின்கட்டண உயர்வால் கடுமையான அளவுக்கு பாதிப்பு அடைகின்ற நிலை இன்றைக்கு உள்ளது.

மின்சாரம் இருந்தும் கூட ஏற்கனவே மின்சார வாரியம் திறமையில்லாமல் செயல்பட்ட நிலையிலே தமிழக மக்கள் என்ன செய்வார்கள். பேன் இருக்கும் ஆனால் பேன் ஓடாது. இதுபோன்று மின்பொருட்களை பயன்படுத்த முடியாத நிலைக்கு வருவார்கள். இல்லத்தரசிகளுக்கும் சரி, தமிழக மக்களுக்கும் முழுமையான அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால், மின் சாதனங்கள் எல்லாம் பயன்படுத்த முடியாத ஒரு சூழ்நிலைக்கு மின்வாரியம் தள்ளியுள்ளது. இந்த விடியா அரசு தள்ளியுள்ளது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்.