தமிழகம் தற்போதைய செய்திகள்

திமுக ஆட்சியில் புயல், வெள்ளம் வந்தபோது எவ்வளவு கொடுத்தார்கள் – முதலமைச்சர் கேள்வி

சென்னை

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே விலையில்லா அரிசியை தருகிறோம் என்றும் திமுக ஆட்சியில் புயல், வெள்ளம் வந்த போது எவ்வளவு கொடுத்தார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சென்னை, கிண்டி கிங் நோய் தடுப்புமற்றும் மருந்து ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு கொரோனா மருத்துவமனையை திறந்து வைத்து பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி – நவம்பர் மாதம் வரை ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு இலவசஅரிசி மற்றும் இதர பொருட்கள் கொடுக்கும் என்று அரசு அறிவித்தது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டுமென்று ஸ்டாலின் குறிப்பிடுவது குறித்து..

பதில் – அவருடைய ஆட்சிக்காலத்தில் புயல், வெள்ளம் வந்தது, எவ்வளவுகொடுத்திருக்கிறார் என்று எண்ணிப் பாருங்கள். அரசாங்கத்தின் நிதிநிலைக்கு ஏற்றவாறு, இன்றைக்கு அம்மாவுடைய அரசு, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் தேவையான பொருட்களை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கி கொண்டிருக்கிறோம். மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், ஏழை எளிய மக்களுக்கு அரசின் மூலமாக பல்வேறு சலுகைகள் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இன்றைக்கு விலையில்லா அரிசி கொடுக்கின்றோம். மத்திய அரசாங்கமும் கொடுக்கிறது.

அதேபோல விலையில்லா சர்க்கரை, பருப்பு, எண்ணெய் தொடர்ந்து கொடுத்து கொண்டு இருக்கின்றோம். அதேபோல, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், அம்மாவுடைய அரசு உதவித்தொகையாக 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். அதேபோல விலையில்லா அரிசி, எண்ணெய், பருப்பு கொடுத்தோம்.

எல்லா அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் கொடுத்தோம். மீண்டும் சென்னையிலும், மதுரையிலும் முழுஊரடங்கு பிறப்பித்தவுடன் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் அம்மாவுடைய அரசு வழங்கியது. குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றவர்கள், சாதாரண மக்கள், கொரோனா தொற்று ஏற்பட்டால் சிகிச்சை பெறுகின்ற காலத்திலே ஒரு வாரம் தங்கியிருந்தால் 1000 ரூபாய் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பும் நாங்கள் கொடுத்திருக்கின்றோம்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.