சேலம்

மக்களை இருளில் மூழ்கடிக்கிறது விடியா தி.மு.க. அரசு-சேலம் மாவட்ட மக்கள் கொந்தளிப்பு

சேலம்

கொரோனா ஊரடங்கு மற்றும் அசாதாரண சூழலில் இருந்து பொதுமக்கள் படிப்படியாக தங்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்து வரும் இந்த நிலையில் விடியா தி.மு.க. அரசின் மின் கட்டண உயர்வு, மக்களை இருளில் மூழ்கடிக்கும் செயலாக இருக்கிறது என சேலம் மாவட்ட மக்கள் கொந்தளிப்புடன் கூறி உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்து வருமாறு:-

விடியா தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கீடு எடுக்கும் முறையை, மாதம் ஒருமுறை என மாற்றுவோம் இதன்மூலம் தமிழக மக்களின் மின்கட்டண சுமை குறையும் என தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தனர்.

அதை எப்போது நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கடுமையான அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்த விடியா தி.மு.க. அரசு ரூபாய் 55 முதல் 1130 ரூபாய் வரை மின் கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் வரை இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது மின் கட்டணம் உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்வாரியம் அளித்துள்ள பரிந்துரைகளின் படி மின்கட்டணம் உயர்ந்தால் ஏழை மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள்.

200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு ஒரு மாதத்திற்கு ரூ.27.50 கூடுதல் கட்டணம் செலுத்த பரிந்துரைக்கப்பட்டது. இதனால் 55 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும். இதே போல் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் மாதத்திற்கு 297.50 ரூபாயும் இரண்டு மாதத்திற்கு 595 கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் கடந்த ஓராண்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்து விட்டது. அதற்குள் இந்த கொரோனா காலகட்ட சூழலில் இருந்து தற்போதுதான் மீண்டு வரும் பொதுமக்கள், மின் கட்டண உயர்வால் மீண்டும் பின்னோக்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மக்களை இருளில் தள்ளும் இந்த விடியா தி.மு.க. அரசு, தமிழ்நாடு மின்சார வாரியம் அளித்த பரிந்துரையில் மின் கட்டண உயர்வு என்பது தற்போதைய சூழலில் மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தான் தமிழகம் முழுவதும் சொத்து வரியை 150 சதவீதம் அளவிற்கு உயர்த்தியது.

மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுகளையே ஏழை, எளிய, நடுத்தர மக்கள் ஜீரணிக்க முடியாத சூழலில் விடியா தி.மு.க. அரசு மின்கட்டண உயர்வை உயர்த்த முடிவு எடுத்திருப்பது என்பது வெந்த புண்ணில் விரலைப் பாய்ச்சுவது போல் உள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்காக திட்டங்களை தீட்டும் அரசு நிர்வாகம், நாட்டு மக்களின் வளர்ச்சிக்காகவும் பயன்பெறும் வகையில் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். இந்த விடியா தி.மு.க. அரசின் மின்சார கட்டண உயர்வு என்பது ஏழை, நடுத்தர மக்களை பின்னோக்கி தள்ளும் அவல நிலையை ஏற்படுத்தப் போகிறது. இதனால் மக்களை இருளில் மூழ்கடிக்கும் வேலையை தான் இந்த விடியா தி.மு.க. அரசு செய்துள்ளது என பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.