தற்போதைய செய்திகள்

விடியா தி.மு.க ஆட்சியை கண்டித்து கழகம் தொடர் போராட்டம் நடத்தும்

எதிர்க்கட்சி துணைக்கொறடா சு.ரவி எம்.எல்.ஏ பேட்டி

ராணிப்பேட்டை

விடியா தி.மு.க. ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், மாணவிகள், அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சாட்டி உள்ள எதிர்க்கட்சி கொறடா சு.ரவி எம்.எல்.ஏ., தி.மு.க. ஆட்சியை கண்டித்து கழகம் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று கூறி உள்ளார்.

எதிர்க்கட்சி துணை கொறடாவும், ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான சு.ரவி எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

10 வருட காலமாக கழக ஆட்சியில் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் கழகத்தினர் ஒரு சிறு தவறும் செய்யவில்லை. அலுவலர்கள் சுதந்திரமாக செயல்பட்டனர். கழகத்தினர் எந்த இடர்பாடும் அரசு ஊழியர்களுக்கு செய்யவில்லை. ஆனால் இன்று விடியா திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் பணி செய்ய முடியாமல் தத்தளிக்கின்றனர். அரசு பணியாளர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

இவ்வாறு தொடர்ந்தால் மக்களுக்கான திட்டங்கள் எவ்வாறு மக்களுக்கு சென்று சேரும். ஆளுங்கட்சி என்பதால் தி.மு.க. நிர்வாகி மீது விடியா தி.மு.க அரசின் ஏவல் துறையாக செயல்படும் காவல்துறையானது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. தமிழக காவல்துறை கள்ளக்குறிச்சி காவல்துறையாக செயல்படுகிறது.

காவல்துறை ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை. காவல் துறை ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் கையில் உள்ளது. அதனால் காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் கலவரத்தால் இன்று புரட்டி போடப்பட்டு இருக்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

விடியா தி.மு.க ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், மாணவிகள், அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அரசு பணியாளர்கள், அரசு ஊழியர்கள் இல்லை என்றால் தி.மு.க ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. அரசு பணியாளர்கள், அரசு ஊழியர்கள், ஒட்டுமொத்தமாக தி.மு.க.வுக்கு வாக்களித்ததால் தமிழகத்தில் தி.மு.க ஆட்சியை பிடித்தது.

அகவிலைப்படி உயர்வு மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று தேர்தலில் அறிவித்து விட்டு இன்று அதை நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களுக்கே விடியா தி.மு.க. அரசு அல்வா கொடுத்து கொண்டிருக்கின்றது.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு இரண்டாவது அல்வா கொடுத்திருக்கிறது. அரசு பணியாளர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும், டெண்டர் அரசு விதிப்படி செயல்படுத்த வேண்டும், ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் லட்சுமிகாந்தன் என்பவரை கைது செய்ய காவல்துறை தயக்கம் காட்டக்கூடாது.

தி.மு.க. நிர்வாகி லட்சுமி காந்தன் மீது நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட கழகம் சார்பில் தொடர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், எதிர்க்கட்சி துணை கொறடவுமான சு.ரவி எம்.எல்.ஏ தெரிவித்தார்.