ராமநாதபுரம்

மருந்தகம் மற்றும் உணவு சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே திறக்க அனுமதி – மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தகவல்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்தகம், பால் மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள், நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்து கடைகள், நிறுவனங்களும் 31.3.2020 வரை அடைக்கப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

பாரத பிரதமரின் அறிவுறுத்தலின்படி, 22.3.2020 (நேற்று) ஒரு நாள் மக்கள் சுய ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு மிக அத்தியாவசிய தேவையான பால், காய்கறிகள், உணவுப்பொருட்கள், மருந்துகள், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருள் தொடர்பான கடைகள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் 31.03.2020 வரை கட்டாயம் அடைத்திட வேண்டும்.

இதனை கண்காணித்திட காவல்துறை, வருவாய் துறை மற்றும் உள்ளாட்சித் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை மீறும் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் தனிநபர் சுகாதாரம் பேணும் வகையில் தொடர்ந்து சோப்பு, சானிடைசர் பயன்படுத்தி சில நேரங்களுக்கு ஒருமுறை கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை விடுமுறை நாட்களில் குழுவாகக் கூடி விளையாடுவதை தவிர்ப்பது, தனுஷ்கோடி, அரியமான் கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கை கழிக்கும் இடங்களுக்கு கண்டிப்பாக பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

சாதாரண மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். மருந்தகங்கள் மற்றும் உணவகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் போதிய இடைவெளி விட்டு செல்லுமாறும், அங்கு தேவையின்றி அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவராவ் கேட்டுக் கொண்டார்.