தற்போதைய செய்திகள் விழுப்புரம்

உயிருடன் இருப்பவரை இறந்ததாக அவரிடமே கூறிய அதிகாரிகள் -அதிர்ச்சியடைந்த மூதாட்டி சார் ஆட்சியரிடம் முறையீடு

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உயிருடன் இருப்பவரை, இறந்து விட்டதாக அவரிடமே வட்டாட்சியர் அலுவலர்கள் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி தான் இறந்து விட்டதாக கூறி எனக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது என்று சார் ஆட்சியரிடம் புகார் கூறி உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேல்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அன்பழகன் மனைவி மனோன்மணி (வயது 60). இவர் அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை ரூ.1000த்தை மாதந்தோறும் பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 9 மாதங்களாக அவருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மனோன்மணி திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது குறித்து கேட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த ஊழியர் மனோன்மணி என்பவர் இறந்து விட்டார், அவருக்கு எப்படி முதியோர் உதவித்தொகை வரும் என்று மனோன்மணியிடமே கூறியிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மனோன்மணி நேற்று திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அங்கு புகார் கூறி உள்ளார்.

அதில் நான் இப்போது வரை உயிருடன் தான் இருக்கிறேன். ஆனால் நான் இறந்து விட்டதாக கூறி எனக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டு இருக்கிறது என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் தெரிவிக்கின்றனர்.

நான் உயிருடன் இருக்கும் போது எப்படி இறந்து விட்டதாக கூறி எனக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் அவர் கூறியிருந்தார்.

உயிருடன் உள்ள மூதாட்டி இறந்து விட்டதாக அவருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டு இருப்பது இந்த விடியா தி.மு.க. ஆட்சியில் தான். இதுதான் விடியா அரசின் அவல நிலை என்று மக்கள் வேதனையுடன் கூறி சென்றனர்.