தற்போதைய செய்திகள்

புரட்சித் தலைவி அம்மா வாழ்ந்த வேதா இல்லம் விரைவில் நினைவிடமாக மாற்றப்படும் – சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை

செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் நேற்று குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன் கேட்ட வேதா இல்லம் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலுரை வருமாறு:

உறுப்பினர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு இல்லமாக அறிவித்து விரைவிலே நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டுமென்ற கருத்தைச் சொன்னார்கள். தமிழகத்தின் பொற்கால முதல்வராக கழகத்தின் காவல் தெய்வமாக அம்மா அவர்கள் வாழ்ந்த புனித இல்லமான வேதா நிலையத்தை இன்றைக்கு தமிழர்தம் எண்ணங்களை எல்லாம் நிறைவேற்றுகின்ற அம்மா அவர்களின் புகழுக்கு புகழைச் சேர்க்கின்ற வகையிலே தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 17.8.2017 அன்று அம்மா அவர்கள் வாழ்ந்த வேதா இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை அறிவித்தார்கள்.

அவ்வில்லம் அமைந்துள்ள மயிலாப்பூர் தாலுகா, மயிலாப்பூர் பகுதி 1-ல் (Part 1), பிளாக் எண் 31, R.S. எண் 1567/50-ல் அமைந்துள்ள மொத்தப் பரப்பளவு 10 கிரவுண்ட் 0322 சதுர அடி நிலத்தினை 2013ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்திய சட்டம் 30/2013) கீழ் கையகப்படுத்தி அரசுக்கு ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நிர்வாக அனுமதி அளித்து அரசாணை 05.10.2017-ல் வெளியிடப்பட்டது.

2. அதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் கோரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான உடனடி செலவினங்களுக்கு ரூ.5,25,000/-க்கு நிதியொப்பளிப்பு செய்து அரசாணை 04.01.2018ல் வெளியிடப்பட்டது.

3. “வேதா நிலையம்” இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றுதல் தொடர்பாக, நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளவும், செயல்விளைவுகள் மதிப்பீடு பணிகள் மேற்கொள்ளவும், ரூ.30,09,338/-க்கு நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை 17.07.2018ல் வெளியிடப்பட்டது.

4. சமூக தாக்க மதிப்பீட்டு முகமை நில நிர்வாக ஆணையரால் நியமிக்கப்பட்டு, அந்த அமைப்பின் மூலம் விரிவான ஆய்வுகள் நடத்துதல், பொதுமக்கள், பங்குதாரர்கள் மற்றும் அப்பகுதி மக்களைச் சந்தித்தல், கருத்தறிதல் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்துதல் ஆகிய பணிகளை முடித்து, சமூகத் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை மற்றும் சமூகத் தாக்க வரைவு திட்ட அறிக்கை ஆகியவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்து 14.12.2018 அன்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது.

பொதுமக்கள், பங்குதாரர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஏதுவாக, வெளியிடப்பட்டு, 02.01.2019 அன்று பொது விசாரணை (Public Hearing) தேனாம்பேட்டை மாநகராட்சி சமூக நலக் கூடத்தில் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் எழுபப்பட்ட ஆட்சேபனைகளின் மீதான குறிப்புரைகள் செய்தித்துறையால் வழங்கப்பட்டது.

5. நில எடுப்புச் சட்டத்தின் பிரிவு எண் 15 (1) மற்றும் (2) ஆகியவற்றின் படி, அறிவிக்கையின் மீது பெறப்பட்ட மறுப்புரைகள் குறித்த பரிந்துரைகள் மற்றும் நடவடிக்கைகளின் மீதான பதிவுறு ஆகியவை நில எடுப்பு அலுவலர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு, அம்மறுப்புரைகள் கவனமாகக் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, நில எடுப்புச் சட்டத்தின் பிரிவு எண் 15(3)-ன் கீழ் அம்மறுப்புரைகள் நிராகரிக்கப்பட்டு, பிரிவு எண் 19 (1)-ன் கீழ், நில எடுப்பு செய்யப்படவுள்ள நிலம் பொதுப் பயன்பாட்டிற்கு தேவைப்படுவதாக விளம்பரப்படுத்தப்பட்டு, 22.01.2020 நாளிட்ட சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் நடவடிக்கையில், நில எடுப்புச் சட்டத்தின் பிரிவு எண் 19 (2)-ன் படி, மேற்கண்ட நில எடுப்பினால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் எதுவும் இல்லை எனவும், அவர்களை அப்புறப்படுத்தவோ, மறு குடியமர்த்தவோ, மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவோ எந்த அவசியமும் எழவில்லை என்ற சுருக்கக் குறிப்புடன், மேற்கண்ட விளம்புகையை நில எடுப்பு அலுவலர் அவர்கள் (Declaration) வெளியிட ஆணையிடப்பட்டுள்ளது.

6. நில எடுப்பு அலுவலரால் படிவம் VI சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நில எடுப்புச் சட்டத்தின் பிரிவு எண் 19 (2)-ன் படி, மாவட்ட ஆட்சித் தலைவரால் குறிப்பிடப்பட்டுள்ள விளம்புகையுடன், மறுவாழ்வு மற்றும் குடியமர்வுத் திட்டத்தின் சுருக்கம் தமிழ்நாடு அரசிதழ் மற்றும் இரண்டு நாளிதழ்களில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

7. மேலும், தோராய தீர்ப்பாணைத் தொகையான ரூ.67,16,61,225/-ஐ வைப்பீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

8. மேற்கண்ட பொருள் தொடர்பாக, தங்கவேலு மற்றும் டிராஃபிக் ராமசாமி ஆகியோரால் தொடரப்பட்ட வழக்குகள் (W.P.No.23501/2017 மற்றும் W.P.No. 134/2018) சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

9. இது தவிர, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சொத்துக்களை நிர்வகிக்க தமிழ்நாட்டின் பேராட்சியருக்கு ஆட்சி உரிமை ஆவணம் வழங்கக் கோரி புகழேந்தி என்பவரால் தொடரப்பட்ட வழக்கும் (O.S.A. No. 445/2018) நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு விரைவாக முடிக்கப்படு கின்ற நேரத்திலே, உறுப்பினர் மட்டுமல்ல, தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப முதலமைச்சர் நிச்சயமாக விரைவிலே அம்மா அவர்கள் வாழ்ந்த வேதா நிலையம் அரசின் ஆணைகளைப் பெற்று நினைவிடமாக அமைக்கப்படுகின்ற நல்ல தகவலை இந்தப் பேரவைக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு பேரவையில் உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.