தற்போதைய செய்திகள்

2,036 கொள்முதல் நிலையங்கள் மூலம் 19.22 லட்சம் மெட்ரின் டன் நெல் கொள்முதல் – பேரவையில் அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

சென்னை:-

2,036 கொள்முதல் நிலையங்கள் மூலம் 19 லட்சத்து 22 ஆயிரத்து 805 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் திருவிடைமருதூர் ஆடுதுறை பேரூராட்சி ஆவணியாபுரத்தில் முழு நேர நியாய விலைக்கடைகள் 1,254 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நியாய விலைக்கடையில் புதிய பகுதிநேர நியாய விலை கடை அமைக்க கோரப்படும், கீழ மருத்துவகுடி வெள்ளார் தெரு பகுதியை சேர்ந்த 220 குடும்ப அட்டைகளும் அடங்கும்.

தற்போதுள்ள விதிமுறைகளின்படி புதிய நியாய விலைக் கடை அமைக்க நியாய விலை கடைகளுக்கு இடையே குறைந்தபட்ச தூரம் குறித்த நிபந்தனை பூர்த்தியாகாததால், அங்கு அமைக்க இயலாது. அப்பகுதியில் நகரும் நியாய விலைக்கடை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் 795 நியாய விலைக்கடைகளும், 1686 பகுதி நேர கடைகளையும் துவங்கி இந்த அரசு வரலாற்று சாதனை படைத்துள்ளது என்றார்.

தொடர்ந்து அறந்தாங்கி தொகுதி உறுப்பினர் ரத்தினசபாபதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் அதிக அளவு நெல் பயிரிடப்படுகிறது. எனவே அங்கு நவீன அரிசி ஆலை ஒன்றை அமைத்து தர வேண்டும். அதேபோல் எனது ஊரான நெற்குப்பம் ஊராட்சியில் களத்துடன் கூடிய நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை அரசு அமைத்து தர வேண்டும் என்றார். இதற்கு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தேவைப்படும் இடங்களில் நவீன அரிசி ஆலைகளை அமைத்து தர அரசு முன் வருகிறது. தற்போது 21 நவீன அரிசி ஆலைகளும், 330 அரவை முகவர்களும் செயல்படுகிறார்கள். தஞ்சாவூரில் ஒரு நவீன அரிசி ஆலையும், திருவாரூரில் ஒரு நவீன அரிசி ஆலையும், ஆத்தூரில் ஒரு நவீன அரிசி ஆலையும் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தேவையின் அடிப்படையில் உறுப்பினரின் கோரிக்கையை நிறைவேற்றி தர அரசு பரிசீலிக்கும்.

தமிழக முதல்வர் எங்கும் இல்லாத அளவில் 6 ஆயிரம் கோடி அளவுக்கு உணவு மானியம் வழங்கி உள்ளார். 2016ம் ஆண்டிலிருந்து தற்போது வரை ரூ.29 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு உணவு மானியம் வழங்கி எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய அரசு ஒரேநாடு ஒரேரேஷன் அட்டை என்ற திட்டத்தை கொண்டு வந்தபோது, தமிழகத்தில் பொது வினியோகத்துறைக்கு எந்த பாதிப்பு ஏற்படாத வகையில் அந்த திட்டத்தில் சேர முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக எந்த இடத்தில் வேண்டுமானாலும், ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்கித்தர அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

பரீட்சார்த்த முறையில் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும், எந்த இடத்தில் வேண்டுமானாலும், ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் திட்டம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதன் மூலம் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நிலை தமிழகத்தில் உருவாகும் என்றார்.

அதனைத்தொடர்ந்து பூம்புகார் தொகுதி உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் தமிழகத்தில் எத்தனை நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. எவ்வளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தமிழகத்தில் தற்போது 2,036 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இது தான் எப்போதும் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை ஆகும்.

இதற்கு முன்பு 1,800 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அதிகபட்சமாக இருந்தது.தற்போது வரை 19 லட்சத்து 22 ஆயிரத்து 805 மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் மட்டும் 1,508 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன என்று பதில் அளித்தார்.