தி.மு.க.வுக்கு இனி வீழ்ச்சியாக இருக்கும்-முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் சூளுரை

அம்பத்தூர்
எடப்பாடியாரின் தலைமையேற்றது முதல் கழகத்திற்கு எழுச்சியாக இருக்கிறது. தி.மு.க.வுக்கு இனி வீழ்ச்சியாகவும் இருக்கும் என்று முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான பா.பென்ஜமின் சூளுரைத்துள்ளார்.
திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரவாயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத்தலைவர் தி.பா.கண்ணன் தலைமையில நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக, முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும், கழக அமைப்பு செயலாளராக முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் நியமனம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்தில் சரியான நடவடிக்கை எடுக்காத விடியல் அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், கொரோனா பாதிப்பில் இருந்து மீளாத தமிழக மக்களிடம் சொத்து வரி, மின்சார வரி, ஆகியவற்றை உயர்த்தி உள்ள ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தும், திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதன்பின்னர் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் பேசியதாவது:-
இன்று ஒட்டுமொத்த தமிழ்நாடே உற்று நோக்கி கழகத்தின் ஒற்றைத்தலைமையாக கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் தேர்வு செய்ய வேண்டும் என்று எண்ணி இருந்த காலகட்டத்தில் கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற முடியாத அந்த தீர்மானம் மீண்டும் ஜூலை 11-ம்தேதி நமது மாவட்டத்தில் நமது தொகுதியில் கழக இடைக்கால பொதுச்செயலாளராக ஒன்றரை கோடி தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவோடு எடப்பாடியார் தேர்வு செய்யப்பட்டது நமக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.
ஏன் என்று சொன்னால் பல்வேறு காலகட்டங்களில் இரட்டை தலைமையால் சில முடிவுகளை எடுக்க முடியாத சூழ்நிலையில் வலிமையான ஒற்றை தலைமை என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் இன்று அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
எடப்பாடியார் எப்போது கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனாரோ அந்த நிமிடத்தின் முதல் கழகத்திற்கு எழுச்சியாகவும் தி.மு.க.வுக்கு வீழ்ச்சியாகவும் இருக்கும்.
இன்றைக்கு கடந்த ஓராண்டு கால ஆட்சி காலத்தில் தி.மு.க அரசு மக்களிடத்தில் கடும் வெறுப்பை சம்பாதித்துள்ளது மக்கள் எடப்பாடியார் ஆட்சி காலம் தான் சிறந்த காலம் என்று பேச தொடங்கியுள்ளனர். அந்த அளவுக்கு மக்களிடம் வெறுப்பை சம்பாதித்துள்ளது தி.மு.க அரசு.
ஆனால் ஆனால் எடப்பாடியாரின் பொற்கால ஆட்சியில் கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை கருத்தில் கொண்டு அவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் வகையில் அவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை பெற்று தந்து ஏழை வீட்டு பிள்ளையும் மருத்துவம் பயிலும் என்ற கனவை நினைவாக்கியது அம்மா
வழியில் வந்த எடப்பாடியார் அரசு இது மட்டுமல்லாமல் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு அணைகள் மட்டுமில்லாத தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகிறது என்றால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகளை முறையாக தூர்வாரி குடி மராமத்து பணிகளை தொடங்கி வைத்து பணிகளை முறையாக செய்து இன்று தமிழகத்தின் குடிமராமத்து நாயகனாக கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் திகழ்கிறார் என்றால் அதற்கு ஈடு இணை இல்லை.
இந்த கழகத்தில் கிளை கழக செயலாளராக கழகத்தின் ஆணிவேராக தன்னுடைய பணியை தொடங்கி நகர செயலாளர், மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் இருந்தவர் இன்று இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக ஒரு சாமானியனாக இருந்து வந்துள்ள எந்த ஒரு சவாலையும் திறம்பட உறுதியோடு எதிர்கொள்ளும் எடப்பாடியார் தலைமையில் இனி வரும் அனைத்து தேர்தலிலும் கழகம் மாபெரும் வெற்றி பெறும்.
கழகத்தில் மட்டும் தான் சாமானியன் கூட கழகத்தின் உச்சபட்ச பதவிக்கு வர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் எடப்பாடியார். எனவே எடப்பாடியாரின் ஒற்றைத்தலைமையின் கீழ் கழகம் அறிவித்துள்ள முதல் ஆர்ப்பாட்டம் நீங்கள் அனைவரும் அப்பகுதி மக்களிடம் எடுத்துக்கூறி லட்ச கணக்கில் திரண்டு திமுக அரசுக்கு நமது கண்டனத்தை தெரிவிப்போம்.
இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் பேசினார்.