தற்போதைய செய்திகள்

நவீன தொழில்நுட்பக்கருவிகள் மூலம் தலைமைச் செயலக ஊடக மையம் மேம்படுத்தப்படும் – சட்டப்பேரவையில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அறிவிப்பு

சென்னை

ரூ.14 லட்சம் செலவில் நவீன தொழில்நுட்பக்கருவிகள் கொள்முதல் செய்து தலைமைச் செயலக ஊடக மையம் மேம்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரம் மானியக் கோரிக்கைள் குறித்து அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமகம் பல்நோக்கு கலையரங்கத்தில் உணவு அருந்தும் அறையின் மேற்கூரையின் உயரத்தை உயர்த்துதல், மின்சார இணைப்பினை மாற்றுதல், பாதாள சாக்கடை அமைப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் ரூ.12 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும். சிவகங்கை மாவட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம் மற்றும் வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம் அமைந்துள்ள வளாகத்தில், வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் வைத்தல், அலுவலகக் கட்டடம் கட்டுதல், குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி மேம்படுத்துதல் ஆகிய பணிகள் ரூ.17 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில், 12 தங்கும் அறைகள், கழிப்பறைகள், மனமகிழ் அறை போன்ற வசதிகளுடன் ரூ.1 கோடியே 30 இலட்சம் செலவில் 2வது தளம் புதிதாக கட்டப்படும். எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர்களின் செயல்முறை படப்பிடிப்பு பயிற்சிக்காகவும், குறும்படம் தயாரிப்புக்காகவும் அமைந்துள்ள மாணவர்களுக்கான படப்பிடிப்பு தளத்தில் நவீனமுறையில் மாற்றியமைக்கும் மடங்கு அரங்கம் மற்றும் ஒளியமைப்பிற்கான பாதுகாப்பு நடைமேடை (ரூ.22 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள மேற்கோள் பிரிவு கணினி, பிரிண்டர், ஸ்கேனர் போன்ற நவீன கருவிகளுடன் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புனரமைக்கப்படும். மேற்கோள் பிரிவில் பராமரிக்கப்படும் நாளிதழ்களின் முக்கிய செய்திகள், முதலமைச்சரின் அறிவிப்புகள், உரைகள், செய்தியாளர் சந்திப்பு, அரசின் சாதனைகள், அரசு நலத்திட்ட உதவிகள், நாளிதழ்களின் தலையங்கங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் மற்றும் பல்வேறு தலைவர்களின் கருத்துக்கள் போன்ற செய்தி நறுக்குகள் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் செலவில் தொகுப்பு புத்தகமாக பைண்டிங் செய்து பாதுகாக்கப்படும்.

அனைத்து அரசு நிகழ்ச்சிகளையும் வீடியோ மூலம் ஒளிப்பதிவு செய்து அவற்றை தொகுத்து, அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளுக்கு பதிவேற்றம் செய்தல், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள எல்இடி டி.வியின் மூலம் கள விளம்பரப் பணிகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள ரூ.14 லட்சம் செலவில் நவீன தொழில்நுட்பக்கருவிகள் கொள்முதல் செய்து தலைமைச் செயலக ஊடக மையம் மேம்படுத்தப்படும். தமிழரசு அச்சகத்தில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு தனித்தனியாக உணவு அருந்தும் அறை ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிதாக கட்டப்படும்.

தமிழரசு அச்சகத்தில் கணினியிலிருந்து தட்டுகள் உருவாக்கும் இயந்திரம் அமைந்துள்ள அறையின் மேற்கூரையை சீரமைத்தல் மற்றும் பாதுகாப்பு நலன் கருதி தமிழரசு அச்சகத்தின் சுற்றுச்சுவரை உயர்த்துதல் ஆகிய பணிகள் ரூ.15 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும். எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள படப்பிடிப்பு நடத்தப்படும் சாலை ரூ.20 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும். எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் 2016-2017ஆம் கல்வியாண்டு முதல் “இளங்கலை காட்சிக்கலை” நான்காண்டு பட்டப்படிப்பில் பயிலும் மாணவர் நலன் கருதி ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் செலவில் தேவையான நாற்காலிகள் கொள்முதல் செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அறிவித்தார்.