தற்போதைய செய்திகள்

ரூ.24.25 கோடியில் சிறுபான்மையினருக்கான கல்வி, சுகாதாரம், திறன் வளர்ப்பு திட்டங்கள் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

நான்கு வட்டாரங்கள், 18 பகுதிகளில் சிறுபான்மையினருக்கான கல்வி, சுகாதாரம் மற்றும் திறன் வளர்ப்பு திட்டங்கள் ரூ. 24.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:-

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக பின்வரும் அறிவிப்புகளை வெளியிடுகிறேன்:-

1) சிறுபான்மையினர் அதிகமாக வாழும் கூடலூர், மணமேல்குடி, திருவாடனை மற்றும் மண்டபம் ஆகிய 4 வட்டாரங்களிலும், வேலூர், பேரணாம்பட்டு, மேல்விஷாரம், ஆம்பூர், வாணியம்பாடி, திண்டுக்கல், பள்ளப்பட்டி, நாகப்பட்டினம், கீழக்கரை, தூத்துக்குடி, காயல்பட்டிணம், கடையநல்லூர், தென்காசி, திருநெல்வேலி, கொல்லங்கோடு, நாகர்கோவில், குறிச்சி மற்றும் குனியமுத்தூர் ஆகிய 18 பகுதிகளிலும், சமுதாயக் கூடம் அமைத்தல்,

நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறை கட்டுதல், புது அரசு மேல்நிலைப்பள்ளிகள் கட்டுதல், தொழிற் பயிற்சி நிலையம் அமைத்தல், வேலைக்குச் செல்லும் மகளிருக்கான விடுதிகள் கட்டுதல், மதராசா பள்ளிகளுக்கு இணைய வசதியுடன் கூடிய கணினிகள் வழங்குதல் போன்ற சிறுபான்மையினருக்கான கல்வி, சுகாதாரம் மற்றும் திறன் வளர்ப்பு திட்டங்கள், 24.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

2) இத்துறையின் கீழ் இயங்கி வரும் 1,301 விடுதிகளுக்கு DTH இணைப்புடன் LED தொலைக்காட்சிப் பெட்டிகள், 5 கோடியே 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

3) இத்துறையின் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும், கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் 1,000 ரூபாயிலிருந்து 1,100 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இதுதவிர, பொங்கல், குடியரசு தினம், தமிழ் வருடப் பிறப்பு, சுதந்திர தினம் மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகை நாட்களில் சிறப்பு உணவுக் கட்டணமாக தற்போது பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகை 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாகவும், கல்லூரி மாணாக்கர்களுக்கு 40 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

4) மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பிறமலைக் கள்ளர் பள்ளிகளில் பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள 5 கோடி ரூபாய் வழங்கப்படும்.

5) இத்துறையின் கீழ் இயங்கி வரும் 1,354 விடுதிகளில், 1,290 விடுதிகள் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இக்கட்டடங்களில் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அம்மாவின் அரசு 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும்.

6) இத்துறையின் கீழ் இயங்கி வரும் 1,099 பள்ளி விடுதிகளில் 11 பள்ளி விடுதிகள் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கல்லூரி விடுதிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.