தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்-திண்டுக்கல் சி.சீனிவாசன் திட்டவட்டம்

மதுரை
விடியா ஆட்சி மீது தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களே கடும் கோபத்தில் இருக்கின்றனர். எனவே மஹாராஷ்டிராவை போல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறி உள்ளார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதி கழகம் சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது;-
வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. விழாக்களை மட்டும் நடத்தி விட்டு விழா நாயகனாக முதலமைச்சர் உள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்தேர்வுக்கு எதிரான முதல் கையெழுத்தாக இருக்கும் என்று கூறினார்கள்.
ஆனால் இதுவரை கையெழுத்து போடவில்லை. கையெழுத்து போட பேனா கிடைக்கவில்லையா அல்லது மை இல்லையா? இன்றைக்கு கடற்கரையில் ரூபாய் 80 கோடியில் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்கிறார்கள்.
அதேபோல் மதுரையில் ரூபாய் 110 கோடியில் கருணாநிதி பெயரில் நூலகம், இப்படி மக்களின் நிதிகளை எல்லாம் வாரி இறைத்து கஜானாவை காலி செய்து வருகிறார்கள். இன்றைக்கு சரிவர சாலைகள் வசதி கிடையாது.அடிப்படை கட்டமைப்பு கிடையாது. இதற்கெல்லாம் அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்வது கிடையாது.
எடப்பாடியார் ஆட்சி காலத்தில் அவர் ஒருவர் தான் முதலமைச்சராக இருந்தார். ஆனால் இன்றைக்கு ஸ்டாலின், உதயநிதி, துர்கா, சபரீசன் ஆகிய நான்கு முதலமைச்சர்கள் தமிழகத்தில் உள்ளனர்.
திமுக ஆட்சியின் அவலங்களை மூடி மறைப்பதற்காக ஜாதி மத பிரச்சினையை தூண்டும் விதமாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இந்துக்களை கடுமையாக விமர்சித்துள்ளார். அப்படி என்றால் ஸ்டாலின் மனைவி துர்கா, தயாளு அம்மாள் இவரும் பெண்கள் தானே.
இவர்களையும் அவர் விமர்சித்துள்ளாரா? திமுக இதற்கு பதில் சொல்ல வேண்டும் திசை திருப்பக்கூடாது, பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று பெரியார் சொன்னார். ஆனால் பெண்களை இன்றைக்கு இழிவுபடுத்தி பேசி வரும் ஆ.ராசா நாவை அடக்க வேண்டும்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 505 மேற்பட்ட வாக்குறுதிகளை ஸ்டாலின் அள்ளி வீசினர். அதில் பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார்கள். கொடுத்தார்களா? கேஸ் மானியம் வழங்கப்படும் என்று சொன்னார்களே கொடுத்தார்களா ? இதையெல்லாம் விட்டுவிட்டு பெண்களின் தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து விட்டனர். உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டத்தை ரத்து செய்து விட்டனர்.
அம்மா குழந்தைகள் பரிசு பெட்டகத்தை ரத்து செய்து விட்டனர். குடிமராமத்து திட்டத்தை ரத்து செய்து விட்டனர். அம்மா உணவகத்திற்கு மூடு விழா நடத்த முயற்சி செய்து வருகின்றனர். மடிக்கணணி திட்டம் இன்னும் வழங்கவில்லை. இப்படி மக்களுக்கு எந்த திட்டமும் செய்யவில்லை.
ஆனால் சிறுவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்குகிறோம் என்று கூறி அமைச்சர்கள் குழந்தைகளுக்கு ஊட்டி விடுவதை விளம்பரப்படுத்தி வருகின்றனர். புரட்சித்தலைவர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். குழந்தைகளுக்கு ஊட்டி விட்டார். அதை பின்பற்றி இவர்களும் ஊட்டுகின்றனர். எல்லோரும் புரட்சித்தலைவராக ஆக முடியுமா?
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் பேசி வருகின்றனர் என்று ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். இதற்கு சரியான பதிலடியை எடப்பாடியார் கொடுத்து விட்டார். 125 சட்டமன்ற உறுப்பினர்களில் 10 பேரை எழுதாமல் சொல்ல முடியுமா என்று கூறியுள்ளார். இன்றைக்கு திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை போல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுக சட்டமன்ற உறுப்பினர்களே தி,மு,க மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். நிச்சயம் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார், அவரைத்தான் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் இன்றைக்கு எடப்பாடியாருக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. எப்போது தேர்தல் வந்தாலும், அப்போது இரட்டை இலைக்கு வாக்களித்து மீண்டும் எடப்பாடியாரை தமிழக மக்கள் முதலமைச்சராக ஆக்குவார்கள்.
இவ்வாறு கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்டகழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.