தற்போதைய செய்திகள்

நாராயணசாமிநாயுடு, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – பேரவையில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அறிவிப்பு

சென்னை:-

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமிநாயுடு, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரம் மானியக் கோரிக்கைள் குறித்து அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

சென்னை மாநகரில் பணிபுரியும் தகுதிவாய்ந்த பத்திரிகையாளர்களுக்கு தற்போது செய்தியாளர் அங்கீகார அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல மாவட்ட தலைநகரில் பணிபுரியும் தகுதிவாய்ந்த பத்திரிகையாளர்களுக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் தலைமையிடத்திலிருந்து செய்தியாளர் அங்கீகார அட்டை வழங்கப்படும்.

சுவாமி சகஜானந்தா (ஜனவரி 27), இராமசாமி படையாட்சியார் (செப்டம்பர் 16); பட்டுக்கோட்டை அழகிரிசாமி (ஜுன் 23), உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு (பிப்ரவரி 6); டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் (செப்டம்பர் 24) ஆகிய பெரியோர்களின் பிறந்த நாள் விழாக்கள், முறையே கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் மஞ்சக்குப்பம், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, கோவை மாவட்டம் வையம் பாளையம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆகிய இடங்களில், தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் செலவில் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.

சென்னை, தியாகராயநகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் இல்லத்தில் வர்ணம் பூசுதல் மற்றும் மேற்கூரை சீரமைத்தல் முதலான சீரமைப்பு பணிகள் ரூ.7 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும். சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்திலுள்ள, தியாகி வ.உ.சி. ஆங்கிலேயர் காலத்தில் சிறையில் இழுத்த செக்கு சீரமைத்தல், ராஜாஜி நினைவாலயம் மற்றும் ராஜாஜி நூலகம் புனரமைத்தல் மற்றும் அவ்வளாகத்தில் உள்ள நினைவகங்களில் மின்பணிகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் ரூ.10 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும். சென்னை கலைவாணர் அரங்கத்தில் ரூ.10 லட்சம் செலவிலும், வள்ளுவர் கோட்டத்தில் ரூ.6 லட்சம் செலவிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அறிவித்தார்.