கரூர்

நியாயவிலைக்கடைகள் மூலமாக பெறப்படும் பொருட்களை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் எச்சரிக்கை

கரூர்

கரூர் மாவட்டத்தில் தற்போது பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் 297186 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசியும், குறைந்த விலையில் சர்க்கரையும் வழங்கப்படுகிறது. 9509 சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் சர்க்கரையும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் துவரம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டைகளுக்கு நியாயவிலைக்கடைகள் மூலமாக பெறப்படும் பொதுவிநியோகத்திட்ட அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் சிறப்பு அத்தியாவசியப் பொருட்களை வெளிச்சந்தையிலோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ விற்பனை செய்வது தெரியவந்தால் 1982 ஆம் ஆண்டின் அட்டவணைப்பொருட்கள் சட்டப்படி சம்மந்தப்பட்டவர்களின் குடும்ப அட்டைகளை பொருட்கள் இல்லா அட்டைகளாக மாற்றம் செய்யப்படும். மேலும் சம்மந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்.

மேலும் பொதுமக்கள் தங்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பொருட்கள் தேவையில்லையெனில் இணையதளம் மூலமாகவோ tnpds.gov.in என்ற செல்போன் அப்ளிகேசன் மூலமாகவோ உரிமம் விட்டுக்கொடுத்தல் என்ற வசதியினை பயன்படுத்தி பொருட்கள் வேண்டாம் என்று உரிமையினை விட்டுக்கொடுக்கலாம். பின்னர் தேவைப்படும் போது திரும்ப பெற்றுக் கொள்ளும் வழி முறையும் உள்ளது. எனவே, இம்முறையினைப் பின்பற்றி பொதுமக்கள் தங்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்படுவதை நிறுத்தி வைத்து பயனடையலாம்.

கரூர் மாவட்டத்தில், பொது விநியோகத்திட்ட அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் சிறப்பு அத்தியாவசியப் பொருட்களை கள்ளத்தனமாக பெற்றுக் கொள்வதற்கு கடத்தல்காரர்களுக்கு துணை புரியும் பொது மக்களாக இருப்பினும், அரசுப்பணியாளர்களாக இருப்பினும் இது குறித்து கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு அத்தியாவசியப்பொருட்கள் கடத்தல் தடுப்புச்சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.