தற்போதைய செய்திகள்

கொரோனா குறித்து விவாதிக்க சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் – அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

புதுச்சேரி

புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் எம்.எல்.ஏ., இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டில் கொரோனா நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் அறிவித்த மக்கள் சுய ஊரடங்கு உத்தரவிற்கு ஒத்துழைப்பு அளித்த புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். அதுபோல் மக்கள் நலனிற்காக பாடுபட்ட சுகாதாரத்துறை மருத்துவர், செவிலியர் உள்ளிட்டோருக்கும், காவல்துறையில் உள்ள அனைத்து பிரிவினருக்கும், துப்புரவு தொழிலாளர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றும் விதமாக தமிழக அரசு வருவாயைப்பற்றி சிந்திக்காமல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, திறம்பட செயல்படுத்தி வருகின்றது. இதனால் பாதிக்கப்படும் வியாபாரிகளும் அரசின் உத்தரவிற்கு செவிமடுத்து செயல்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா சம்பந்தமாக தமிழக முதல்வர் இபிஎஸ் அறிவிக்கும் எந்த அறிவிப்புகளும் அடுத்த சில நிமிடங்களிலேயே செயல்முறை வடிவமும் பெற்று விடுகின்றது.

ஆனால் சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில் கொரோனா சம்பந்தமான அறிவிப்புகள் அனைத்தும் செயல்வடிவம் பெறாமல் ஏட்டு அளவிலேயே உள்ளது. உதாரணமாக நோய் தடுப்பு சம்பந்தமாக எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. எங்கும், எதிலும் கிரிமி நாசினி தெளிக்கப்படவில்லை. மக்கள் அதிகம் கூடும் ரயில்நிலையம், பேருந்து நிலையம், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் சிறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதுச்சேரியில் உள்ள ஸ்டார் ஓட்டல்களில் இன்னும் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. வெளிமாநிலத்தவர் வரவழைத்து தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இவைகள் நிறுத்தப்பட வேண்டும்.

காய்ச்சல் அளவை கண்டறியும் தெர்மா மீட்டல் இல்லை. சுய உதவி குழுக்கள் மூலம் ஒரு லட்சம் மாஸ்க்குகள் தயாரிக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பும் செயல்வடிவம் பெறவில்லை. போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய மனித உயிரை காப்பாற்றும் விஷயத்தில் வழக்கமாக சம்பிரதாயத்திற்காக சில பணிகள் நடைபெறுகின்றது.

வாங்க வேண்டிய பொருட்களை வாங்காமல் காலம் கடத்துவது கொலை குற்றத்திற்கு சமம். எனவே சம்பந்தப்பட்ட அமைச்சரும், முதல்வரும் கொரோனா நோய் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை பலப்படுத்த வேண்டும். அரசு பொது மருத்துவமனையை மட்டும் நம்பாமல் தற்காலிக மருத்துவ முகாம்களை ஏற்படுத்த வேண்டும்.

முதல்வர் கூறுவதற்கு ஏற்றவாறு கலெக்டர் செயல்படுவது தவறான ஒன்று. கலெக்டர் உண்மை நிலையை உணர்ந்து பிரச்சனையை கையில் எடுக்க வேண்டும். 144 தடை உத்தரவு பிறப்பித்தும் நகைக்கடை, துணிக்கடை உள்ளிட்ட பல வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 100க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் தொழிற்சாலையும் இயங்கி வருகின்றது. எனவே 144 தடையில் என்னென்ன விதிமுறைகள் உள்ளது என்பதை தெரியப்படுத்த வேண்டும். இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பின் காரணமாக வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் முதல்வர் நாராயணசாமி ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். பின்னர் 10 தினங்களுக்கு முழுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இதில் உயர் அதிகாரிகள் ஆளுனர், முதல்வர் என இரு பிரிவாக செயல்பட கூடாது. அத்தியாவசிய தேவையான சிறு, சிறு உபகரணங்களை வாங்க தனி குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மாஸ்க் வழங்கப்படவில்லை. அதுபோல் முதல்வர் தொடர்ந்து நடத்தும் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் மருத்துவத்திற்கே தொடர்பு இல்லாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். எனவே மனித உயிர் சம்பந்தமான கொரோனா விஷயத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு அறிய முன்வர வேண்டும். இதற்காக ஒரு நாள் சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். முதல்வர் கூட்ட முன்வரவில்லையென்றால் ஆளுனர் சிறப்பு சட்டம்ன்றத்தை கூட்ட உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக சபாநாயகரிடமும் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்