தற்போதைய செய்திகள்

அம்மா நினைவிடம் விரைவில் திறக்கப்படும் – பேரவையில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்

சென்னை

50.80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் அம்மா அவர்களின் நினைவிடம் திறப்பு விழா விரைவில் நடைபெறும் என்று பேரவையில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை, எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அளித்த பதிலுரை வருமாறு:-

நாட்டிற்கு உழைத்த நல்லவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், விடுதலை போராட்ட வீரர்கள், தமிழ் மொழிகாத்த மொழிப்போர் தியாகிகள், சமூக நீதிக்காக பாடுபட்ட சமூக நீதிக் காவலர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட தலைவர்கள் ஆகியோருக்கு பெருமை சேர்க்கவும், அவர்களின் நினைவுகளைப் போற்றவும் அவர்தம் பெருமைகளை எதிர்கால சந்ததியினர் அறிந்திடவும், அம்மாவின் அரசு அவர்களுக்கு மணி மண்டபங்கள், திருவுருவச் சிலைகள், நினைவு சின்னங்கள் மற்றும் அரங்கங்கள் ஆகியவற்றை அமைத்து நல்லமுறையில் பராமரித்து வருகிறது.

மேலும், இப்பெருந்தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களுடைய பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்து, ஆண்டு தோறும் கொண்டாடி பெருமை சேர்த்து வருகிறது.புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசால், பல்வேறு தலைவர்களுக்கு 71 மணி மண்டபங்கள், 4 அரங்கங்கள், 5 நினைவுத்தூண்கள் மற்றும் ஒரு நினைவுச்சின்னம் ஆகியவை நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அம்மா அவர்களாலும், முதலமைச்சர் எடப்பாடியாராலும் கடந்த 2011 முதல் இன்று வரை, 20 மணிமண்டபங்கள், 1 நினைவுச் சின்னம், ஒரு அரங்கம், பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டதோடு, 47 தலைவர்களின் பிறந்த நாட்களை அரசு விழாவாக அறிவித்து ஆண்டு தோறும் சிறப்பாக அம்மாவின் அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும், முதலமைச்சர் எடப்பாடியாரால், கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டுக்கு உழைத்த நல்லோர் புகழ் பாடி, 7 மணிமண்டபங்கள், ஒரு திருவுருவச்சிலை, ஒரு நினைவுத்தூண், ஒரு நினைவாலயம், ஒரு நினைவிடம் என மொத்தம் 11 நினைவகங்கள் அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அம்மா அவர்களின் நினைவிடம் 50.80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது இதன் திறப்பு விழா மிக விரைவில் நடைபெறும்.

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்திட அம்மா அவர்களது அரசு தற்போது ரூ.75 லட்சம் நிதியுதவி வழங்கி வருகிறது. ரூ.50 லட்சம் வழங்கப்பட்டு வந்ததை, முதலமைச்சர் எடப்பாடியார் ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்கி வருகிறார். இதுவரை 4.75 கோடி மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பதில் அளித்தார்.