சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்களுக்கான இழப்பீடு திட்டம் – முதல்வர் அறிவிப்பு

சென்னை

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்களுக்கான இழப்பீடு திட்டம் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:-

மாற்றுத் திறனாளிகள் நலனை உறுதிப்படுத்தும் வகையில், பின்வரும் அறிவிப்புகளை வெளியிடுகிறேன்:-

1) மனவளர்ச்சி குறைபாடு, மூளை முடக்குவாதம், தசைச் சிதைவு நோய், பல்வகைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடு உடைய ஆயிரம் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தனியே 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சிகிச்சை அளிக்கப்படும்.

2) சேலம் மாவட்டத்தில் தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் செவித்திறன் குறை உடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அம்மாவின் அரசு, கொண்டப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் 1.31 ஏக்கர் நிலம் வழங்கி, 6.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதி வசதியுடன் கூடிய சொந்தக் கட்டடம் கட்டித் தரும்.

3) பாலியல் வன்கொடுமை மற்றும் இதர குற்றங்களால் பாதிக்கப்பட்டு, வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விரைந்து இழப்பீடு வழங்கிட ஏதுவாக, “மாற்றுத் திறனாளி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இழப்பீடு திட்டம்-2020”-க்கான நிதியம், 5 கோடி ரூபாய் வைப்பீட்டுடன் உருவாக்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.