தற்போதைய செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடியார் ஆட்சியில் பத்திரிகையாளர்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் – பேரவையில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பெருமிதம்

சென்னை

பத்திரிகையாளர்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடியார் செயல்படுத்தி வருகிறார் என்று பேரவையில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை, எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அளித்த பதிலுரை வருமாறு:-

முதலமைச்சர் எடப்பாடியார் பத்திரிகையாளர் நலம் பேணி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பத்திரிகையாளர்கள் எந்த பத்திரிகையில் பணியாற்றி இருந்தாலும், அங்கிருந்து வயது மூப்பால் பணி ஓய்வு பெற்றபின் அவர்களது வாழ்க்கை நலனைக் கருத்தில் கொண்டு அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அடுத்தவர் கஷ்டங்களைக் களைவதே தன் வாழ்வின் லட்சியமாக வாழ்ந்த புரட்சித்தலைவர் தான் கொண்டு வந்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டில், 5000 ரூபாயாக இருந்த பத்திரிகையாளர் ஓய்வூதியம் எடப்பாடியாரால் இன்று 10000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. பத்திரிக்கையாளர் மறைவுக்குப்பின் வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 2011ல் ரூ.2500 ஆக இருந்தது இன்று முதலமைச்சரால் ரூ.5000 ஆக வழங்கப்படுகிறது.

இன்னும் குடும்ப உதவி நிதி, பத்திரிகையாளர் நல நிதியம்,வாடகைக்கு அரசுக் குடியிருப்புகள், மாவட்டங்களில் வீட்டுமனை வசதி, பல்வேறு சலுகைகளுக்கு அடிப்படையான செய்தியாளர் அங்கீகார அட்டை, செய்தியாளர் அட்டை, கட்டணமில்லா பேருந்துப் பயணச்சலுகை என எண்ணற்ற நலத்திட்டங்களை பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு வழங்கி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.