கழக ஆட்சி மீண்டும் அமையும் வகையில் தொண்டர்கள் அணி திரள வேண்டும்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி அழைப்பு

கோவை,
வரும் 25-ந்தேதி அன்று தி.மு.க. ஆட்சிக்கு சாவு மணி அடிக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக ஆட்சி மீண்டும் அமையும் வகையில் தொண்டர்கள் அணி திரள வேண்டும் என்று கழக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி அழைப்பு விடுத்து உள்ளார்.
கோவை இதயதெய்வம் மாளிகையில் கோவை புறநகர் தெற்கு, வடக்கு மற்றும் மாநகர் மாவட்ட கழகங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
கோவை மாவட்டத்திற்கும் மட்டுமல்ல தமிழகத்தில் தி.மு.க எந்த திட்டங்களையும் தரவில்லை. கழக ஆட்சியில்
கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் தி.மு.க தொடங்கி வைக்கிறார்கள். எந்த திட்டத்தை தராமல் விளம்பரத்தால் மட்டுமே ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழக மக்கள் அன்றாட வாழ்வையே நடத்த முடியாமல் நொந்து போகும் வகையில் தி.மு.க அரசு சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு கட்டுமான பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்டவற்றை உயர்த்தி மக்களை படாதபாடு படுத்தி வருகிறார்கள்.
பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி திமுக ஆட்சியை பிடித்துள்ளார்கள். அனைத்து தரப்பு மக்களும் திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சொத்து வரி உயர்வு எவ்வளவு என்பதை இப்போது தான் மக்கள் தெரிந்துள்ளனர்.
தமிழகத்தில் என்ன நிர்வாகம் நடக்கிறது என்பது தெரியவில்லை. இதையெல்லாம் தட்டி கேட்பதற்கான மக்களுக்கான போராட்டம் தான் வருகிற 25-ம்தேதி நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடியாரை அறிவித்த பிறகு நடைபெறும் போராட்டம் ஆகும்.
இது மக்களுக்கான போராட்டம் என்பதால் பொது மக்களையும் திரட்ட வேண்டும். கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலிலும், கோவை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் செஞ்சிலுவை சங்கம் அருகிலும்,கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகிலும் மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து வருகிற 25-ம்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மக்களுக்காக போராடுவதற்கு எந்த கட்சியும் இல்லை. அ.தி.மு.க மட்டுமே உள்ளது. பொய் வழக்கு போடுவது மட்டும் தான் இந்த ஆட்சியின் சாதனை. தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. கழக ஆட்சியில் பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றினோம். இந்த ஓராண்டு காலத்தில் தி.மு.க ஆட்சியில் என்ன திட்டத்தை தந்தார்கள்.
நாம் கொண்டு வந்த திட்டங்களை கூட முடிக்காமல் இழுத்து அடிக்கிறார்கள். கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் உளவுத்துறை முழுமையாக தோல்வி கண்டுள்ளது என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்றைய முதல்வர் எடப்பாடியார் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த திட்டமும் தமிழகத்தில் செயல்படுத்த முடியாது என்று நிராகரித்து விட்டார். தி.மு.க ஆட்சியில் எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் செய்வதறியாது நொந்துபோய் உள்ளார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க மாபெரும் வெற்றிபெற்று மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க ஆட்சி அமையும்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம். அனைத்து தரப்பு மக்களுமே தி.மு.க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் தி.மு.க ஆட்சிக்கு சாவு மணி அடிக்கும் வகையில் போராட்டமாக நடைபெற வேண்டும். 2011 அ.தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு கோவை ஆர்ப்பாட்டம் காரணமாக அமைந்தது. அதுபோல இந்த முறையும் அமைய வேண்டும்.
இவ்வாறு கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி.வேலுமணி பேசினார்.