தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவையின் அடிப்படையில் சட்டக்கல்லூரி – உறுப்பினர் கேள்விக்கு, அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்

சென்னை

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவையின் அடிப்படையில் சட்டக்கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது ஈரோடு கிழக்கு கழக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு ஈரோடு மாவட்டத்தில் சட்டக் கல்லூரி துவக்க அரசு ஆவன செய்யுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தற்போது சேலத்தில் புதிய சட்டக்கல்லூரியை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். தேவையின் அடிப்படையில் வருங்காலத்தில் ஈரோட்டில் சட்டக்கல்லூரி அமைக்க அரசு பரிசீலனை செய்யும். மேலும் தனியார் யாராவது முன்வந்து சட்டக்கல்லூரி அமைக்க அனுமதி கேட்டால் அதற்கு அதற்கு தேவையான உதவிகளை செய்யும் என்றார்.

அதைத்தொடர்ந்து கலசப்பாக்கம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சட்டம் பயில வேலூர் அல்லது விழுப்புரம் செல்லவேண்டியுள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய சட்டக்கல்லூரி தொடங்க அரசு முன்வர வேண்டும் என்றார். அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் தற்போது ரூ.27 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த சட்டக்கல்லூரியை முதலமைச்சர் திறந்து வைத்து நல்ல முறையில் இயங்கி வருகிறது.

எனவே மாணவர்கள் இங்கு வந்து படிக்கலாம். மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து திருவண்ணாமலையில் தேவையின் அடிப்படையில் சட்டக்கல்லூரி திறக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்பின்னர் கள்ளக்குறிச்சி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் பிரபு கள்ளக்குறிச்சியில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் அரசு இதுகுறித்து பரிசீலனை செய்யும் என்றார்.