தற்போதைய செய்திகள்

1500 லேப் டெக்னீஷியன், 500 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள் இந்த வாரம் பணி நியமனம் – பேரவையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை

கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள 1500 லேப் டெக்னீஷியன், 500 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள் இந்த வாரம் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று பேரவையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் பெரம்பூர் தொகுதியில் அனைத்து வசதியுடன் கூடிய மகப்பேறு மருத்துவமனை அமைக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பெரம்பூரிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை 9.5 கி.மீ. தூரத்தில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை ஆகியவை விரிவான அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையம், பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவை உள்ளன.

அதேபோல் எழும்பூரில் தாய்சேய் மருத்துவமனை, கஸ்தூரிபாய் மருத்துவமனை ஆகியவை அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. எனவே பெரம்பூர் தொகுதியில் புதிதாக மகப்பேறு மருத்துவமனை அமைக்க தற்போது அவசியம் எழவில்லை என்றார்.

வால்பாறை தொகுதி உறுப்பினர் கஸ்தூரி வாசு வால்பாறை அரசு மகப்பேறு மருத்துவமனையில் ரத்த சேகரிப்பு மையத்தை அமைக்க அரசு முன்வருமா? என்று துணை கேள்வி கேட்டார். அதற்கு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ரத்த சேகரிப்பு மையத்தை அமைக்க வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கையை அரசு கனிவோடு பரிசீலிக்கும். தற்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக 1500 லேப் டெக்னிஷியன், 500 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள் இந்த வாரம் மருத்துவ தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.

அதைத்தொடர்ந்து உறுப்பினர் சதன்பிரபாகர், பரமக்குடி மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ராமநாதபுரத்தில் புதிதாக மருத்துவ கல்லூரி அமைக்கப்பட இருக்கிறது. எனவே பரமக்குடி மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற இயலாது. பரமக்குடி மருத்துவமனை மற்றும் பார்த்திபனூர் மருத்துவமனையில் தேவைப்படும் வசதிகளை செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது என்றார்.