சிறப்பு செய்திகள்

கழக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கழக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.

கடந்த ஜூலை 11-ம் தேதி, ராயப்பேட்டையில் உள்ள கழக தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் வந்த குண்டர்கள் கைப்பற்ற முயன்றனர். அப்போது கழக கோயிலை காப்பாற்ற முயன்ற கழகத்தினர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் வந்த குண்டர்கள்,ரவுடிகள் கழக கோயிலுக்கு உள்ளே புகுந்து அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல காட்சி அளித்தது.

மேலும் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை எடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் வாகனத்தில் காவல்துறையினர் கண் முன்னே எடு்த்து வைத்தனர். இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கழக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கழக அலுவகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும், தலைமை அலுவலகத்தின் சாவியை அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் நேற்றுமுன்தினம் (20-ம்தேதி) உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை கழக தலைமை அலுவலகத்திற்கு வந்த தென்சென்னை ஆர்டிஓ மற்றும் மயிலாப்பூர் வட்டாட்சியர் பாபு ஜெகஜீவன் ராம் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள் கழக தலைமை அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில் உள்ளிட்ட 4 இடங்களில் வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றினர்.

அப்போது கழகத்தின் கட்சி அலுவலகத்தின் மேலாளர் மகாலிங்கம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். உயர்நீதிமன்றம் கட்சி அலுவலகத்திற்குள் ஒரு மாத காலம் தொண்டர்களை அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதால், அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.