சிறப்பு செய்திகள்

ஒரு உயிரை கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை – சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி

சென்னை

தமிழகத்திலிருந்து கொரோனாவை அறவே ஒழிக்கப்படும் வரை எங்கள் பணி தொடரும். ஒரு உயிரை கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  சட்டப்பேரவையில் அளித்த விளக்கம் வருமாறு:-

இன்றைக்கு எதிர்க்கட்சியை பொறுத்தவரைக்கும் இந்த அவையிலே பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்கள். இன்றைக்கு அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இன்னும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற விவரத்தை எல்லாம் கேட்டார்கள். அத்தனை விவரங்களையும் நானும் தெரிவித்தேன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும் தெளிவாக விளக்கமாக அத்தனைக்கும் பதில் அளித்தார்.

அரசு எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கைகளையும் இன்றைக்கு நோயை தடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான். நான் குறிப்பிட்ட அத்தனை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. ஏற்கனவே மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விளக்கமாக, இன்றைக்கு சுகாதாரத்துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவையிலே தெரிவித்து இருக்கின்றார். ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் என்ன காரணத்திற்கு என்று தெரியவில்லை. திடீரென்று இன்றைக்கு அவையை புறக்கணித்திருக்கின்றார்கள்.

சட்டப்பேரவை தலைவர் கூட இன்றைக்கு அலுவல் ஆய்வுக் கூட்டம் காலை 10.15 மணிக்கு நடைபெறும் என்று ஏற்கனவே தெரிவித்தார். அவையிலும் அதைப்பற்றி தெரிவித்தார். அதன் அடிப்படையிலே இன்றைக்கு அலுவல் குழு கூட்டம் சட்டப்பேரவை தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதிலே பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளை எல்லாம் சட்டப்பேரவை தலைவர் அறிவிப்பார் என்பதை இந்த நேரத்திலே தெரிவிக்கிறேன்.

எங்களுடைய அரசை பொறுத்தவரைக்கும் ஒரு உயிரை கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. முதலமைச்சரிலிருந்து, துணை முதலமைச்சரிலிருந்து, அமைச்சரிலிருந்து, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் அர்ப்பணிப்பு உணர்வோடு இதற்கு பணியாற்றிவோம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து கொள்கிறேன்.

எங்களை பொறுத்தவரைக்கும், தமிழகத்தை பொறுத்தவரைக்கும், இன்றைக்கு இது ஒரு மிகப்பெரிய நோய், மிகப்பெரிய சவாலாக எடுத்துக் கொண்டு, இந்த நோய் தடுப்புப் பணியில் நாங்கள் முழுமையாக ஈடுபடுத்தி இந்த நோய் தமிழகத்திலிருந்து முழுமையாக, அறவே ஒழிக்கப்படும் வரை எங்களுடைய பணி தொடரும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, இதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து, கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.