தற்போதைய செய்திகள்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது -முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு

திருவண்ணாமலை

தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச்செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ தலைமை தாங்கி பேசியதாவது:-

இந்த விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மக்களை வஞ்சிக்கும் செயல்களில் ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதும், எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு போடுவதையும், மாற்றுக்கருத்து தெரிவிப்பவர்களை சிறையில் அடைப்பதை மட்டுமே கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.

விடியா திமுக ஆட்சியில் அரசு மக்களை காக்கும் கடமையில் இருந்து தவறி அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையை படிப்படியாக உயர்த்தி வருவதுடன் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கும் வகையில் மின்கட்டணம் உயர்வை உயர்த்தியும், சொத்து வரியை உயர்த்தி வருகின்றனர்.

குடிநீர் இணைப்பு கழிவுநீர் இணைப்பு அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை எளிய மக்களின் குடும்ப சுமையை அதிகரிக்கும் செயலில் ஈடுபட்டு வரும் விடியா திமுக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நல் ஆசியுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக மாண்புமிகு எடப்பாடி யார் அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் போற்றும் வகையில் நல்லாட்சியை வழங்கினார் ஆனால் நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளான அடித்தட்டு மக்களும் பாமர மக்களும் பயன்பெறும் வகையில் குடும்ப தலைவிக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவது,

கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 100 மானியம் வழங்குவது, விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாதது, அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என்று கூறியது, ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தாக நீட் தேர்வை ரத்து செய்வேன் அந்த சூட்சமம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்று பொய்யான வாக்குறுதியை கொடுத்தது

உள்ளிட்ட எந்த ஒரு அடித்தட்டு பாமர மக்களும் பயனடையும் வகையில் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களின் அத்தியாவசிய தேவைகளான அரிசி விலையை ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வரி உயர்த்தியபோது மாநில அரசுக்கு இரண்டு புள்ளி ஐந்து சதவீதம் வரி கிடைக்கும் என்பதால் திமுகவின் நிதி அமைச்சர் அதற்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டார்.

பின்னர் மக்களின் எதிர்ப்பால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என பொய் சொல்கிறார். மேலும், அத்தியாவசிய பொருட்களான பருப்பு, எண்ணெய், காய்கறி உள்ளிட்டவைகளின் விலை ஏற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதை இந்த விடியா திமுக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ பேசினார்.

அதனைத்தொடர்ந்து விடியா திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை 20,000 மேற்பட்ட தொண்டர்கள் பொதுமக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.