தமிழகத்தை தி.மு.க. சீரழித்து வருகிறது-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

விழுப்புரம்,
பள்ளிகள் அருகே கஞ்சா விற்பனை அமோக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை தி.மு.க. சீரழித்து வருகிறது என்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டி உள்ளார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே விழுப்புரம் மாவட்ட கழகம் சார்பில் மக்கள் விரோத விடியா திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்ஜூனன், கழக அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கண்ணன், வெங்கடேசன், முரளி ரகுராமன், தமிழ்ச்செல்வி செல்ல பெருமாள், பாலகிருஷ்ணன், சக்திவேல், ராம்குமார், நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ், தீனதயாளன், ஒன்றிய செயலாளர்கள் பேட்டை முருகன், சுரேஷ் பாபு, ராமதாஸ், கண்ணன், முத்தமிழ் செல்வன், ராஜா, பன்னீர், முகுந்தன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி பேசியதாவது:-
மக்கள் விரோத விடியா முகம் கொண்ட அரசு மின் கட்டணம், சொத்து வரி உயர்த்தியது கண்டனத்திற்குரியது. விடியா அரசு மக்களை ஏமாற்றி தேர்தலில் பொய் கூறி வெற்றி பெற்றுள்ளது.
தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகளான நகை கடன் தள்ளுபடி, மகளிர்க்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை, கேஸ் விலை மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிக்கிறது.
அம்மா அரசு வழங்கிய தாலிக்குத் தங்கம், பசுமை வீடு, அம்மா ஸ்கூட்டர், அம்மா உணவகம், அம்மா மினி மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்களை இந்த திமுக அரசு முடக்கி விட்டது. இந்த ஓராண்டில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களை பன் மடங்கு உயர்த்தி விடியா அரசு மக்களையும் வஞ்சிக்கிறது.
நமது அம்மா அரசோ கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். திமுக அரசு எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் சிமெண்ட் விலை பன்மடங்கு உயர்கிறது.
இதற்கு காரணம் சிமெண்ட் ஆலை நடத்துபவர்கள் திமுக பினாமிகளே. தமிழகத்தில் 38 ஆயிரம் தொழிற்சாலைகள் செயல்படுகிறது. மூலப்பொருட்கள் விலை உயர்வால் வேலைவாய்ப்பு இன்மை அதிகரிக்கிறது. மேலும் உணவுப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை பற்றி மத்திய அரசிடம் ஏன் இந்த திமுக அரசு கேட்கவில்லை.
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. மேலும் ஸ்டாலின் மிகப்பெரிய தவறை செய்து விட்டார் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதியின் மரணத்தை நான்கைந்து நாட்களாக மறைத்து அதற்காக போராடிய போராட்டக்காரர்களை காவல்துறையை ஏவி அடிதடி நடத்தி அதை கலவரமாக மாற்றியது ஸ்டாலினின் கையாலாகாத அரசே காரணம்.
மேலும் மாணவியின் மரணத்தை குறித்து ஜாதியை வெளிக்காட்டி உளவுத்துறை அறிக்கையை செய்தித்தாளில் வரும் அளவிற்கு அஜாக்கிரதையாக இருந்துள்ள ஸ்டாலினை அரசு ஜாதி கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறது.
ஸ்ரீமதி மரணத்தின் போதும் சரி கலவரத்தின் போதும் திமுகவின் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள், எம்பிகள் என்ன செய்து கொண்டிருந்தனர். ஸ்டாலினுக்கு தெரிந்ததெல்லாம் சூட்டிங் செய்வதும், தன் குடும்பத்திற்கு சொத்து சேர்ப்பதும் மேலும் மருமகன் சபரீசன் பங்களா கட்டி வாழ வழிவகை செய்வது மட்டும் தான்.
திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தினந்தோறும் நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர் மாளிகையில் சூரையாடல் சம்பவத்தை ஓ.பி.எஸ் துணையுடன் திமுக அரங்கேற்றி உள்ளனர். தமிழகத்தில் காவல்துறை ஏவல் துறையாக செயல்படுகிறது.
32 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த கழகத்திற்கு முறையான பாதுகாப்பு அளிக்காமல் காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தனர். ஆனால் அம்மா அவர்களோ அறிவாலயத்தை வைகோவிடமிருந்து காப்பாற்றி கொடுத்ததை மறந்து விட்டார்கள். ஓ.பன்னீர்செல்வத்தின் துரோகத்தை கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்கள் யாரும் மறக்க மாட்டார்கள்.
மேலும் தமிழக முழுவதும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது என்றும் அதுவும் பள்ளிகளுக்கு அருகாமையில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது என்றும் இதனை கண்டு கொள்ளாத தி.மு.க.
அரசும் அரசின் ஏவல் துறையின் டிஜிபியும் தமிழ்நாட்டை சீரழித்து கொண்டிருக்கின்றனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா வழியில் மீண்டும் எடப்பாடியார் அவர்கள் தலைமையில் ஆட்சி அமைத்து மக்கள் நல பணிகளை தொடர்வோம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் பேசினார்.