தற்போதைய செய்திகள்

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் பதவியை விட்டு இறங்க வேண்டியது தானே?

ஸ்டாலினுக்கு, கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் சூடான கேள்வி

திண்டுக்கல்

தேர்தலின் போது 525 வாக்குறுதிகளை அளித்த ஸ்டாலின் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் பதவியை விட்டு இறங்க வேண்டியது தானே? என திண்டுக்கல்லில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் சூடான கேள்வி எழுப்பினார்.

சொத்து வரி , மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசை கண்டித்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை தாங்கி பேசியதாவது:-

விடிய அரசு என்றால் விடியா மூஞ்சி இந்த திமுக ஆட்சி பதவியேற்று ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. தேர்தலின் போது 525 வாக்குறுதிகளை அளித்தனர். வானத்தை வில்லாக்குவோம், வில்லை வானக்குவோம் என்றனர் ஆனால் ஒன்று கூட நடக்கவில்லை.

மொத்தத்தில் விலைவாசி ஏற்றம் தான் நாம் கண்ட பலன். இந்நிலையில் மின் கட்டணத்தை உயர்த்தப்போவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை குறைத்து விடுவோம் என மத்திய அரசு கூறியுள்ளது என்று கூறியுள்ளார்.

மத்திய அரசு கூறுவதால் மின் கட்டணத்தை உயர்த்த போவதாகவும் அவர் கூறியுள்ளார். அதற்கு முன் மக்களை கூட்டி கருத்து கேட்போம் என கூறிவிட்டு தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி வருகின்றனர். அம்மா முதல்வராக இருந்த பொழுது 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என கூறி வழங்கினார்கள்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் மாதம்தோறும் கணக்கு எடுப்போம் என கூறினார்கள். ஆனால் கணக்கெடுப்பு செய்யவில்லை மாறாக இரண்டு மாத கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அதற்கு பணம் கட்டணம் நிர்ணயம் செய்கிறார்கள். ஒரு வீட்டில் இரண்டு இணைப்புகள் இருந்தால் அதனை ஒன்றாக்கி மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான வழிவகை செய்கின்றனர்.

200 யூனிட் மின்சாரம் வரை ரூ.27.50 பைசா உயர்த்தியுள்ளனர். அதேபோல் 300 யூனிட் வரை ரூ.72.50,400 யூனிட் வரை ரூ.147.50, 500 யூனிட் வரை 297.50 பைசா, 600 யூனிட் வரை ரூ.155, 700 யூனிட் வரை ரூ.275, 800 யூனிட் வரை ரூ.395, 900 யூனிட் வரை ரூ.565 என உயர்த்தி உள்ளனர்.

கழக ஆட்சியில் வழங்கப்பட்ட 100 யூனிட் மின்சாரம் இலவச திட்டத்தை ரத்து செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மின் கணக்கெடுப்பாளர்கள் கையெழுத்து கேட்டால் போடாதீர்கள். ஏனெனில், 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்வதற்காக கையெழுத்து கேட்கின்றனர்.

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டதற்கு ஸ்டாலின் விழா ஒன்றை நடத்தினார். அதற்கான செலவு ரூ.2 கோடியே 70 லட்சத்து 36 ஆயிரத்து 262 ரூபாய். இந்த விழாவால் பெரிதாக ஒன்றும் விவசாயிகளுக்கு நடக்கப்போவதில்லை. மின்சாரம் வழங்கப்போகிறார்கள்.

அதற்குரிய கட்டணத்தை விவசாயிகள் தர போகிறார்கள். இது போன்ற விழாக்கள் அம்மா முதல்வராக இருந்த போதும், எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த போதும் காணொளி காட்சி மூலமாக விழா நடைபெறும். அரசுக்கு வீண் செலவை ஏற்படுத்த மாட்டார்கள். ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான டிரான்ஸ்பார்மரோ, பவர் ஹவுஸோ எதுவுமே அமைக்கப்படவில்லை.

அம்மா முதல்வராக இருந்த போதும் சரி, எடப்பாடியார் முதல்வராக இருந்த போதும் சரி, எங்கேயாவது மின்தட்டுப்பாடு இருந்ததா? 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டது. மின் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்த சொல்லிய போதும் அதனை ஏற்காமல் 24 மணி நேரமும் கழக ஆட்சியில் மின்சாரம் தங்கு தடையின்றி வழங்கப்பட்டது. ஆனால், திமுக அரசு மத்திய அரசு மீது பழி போட்டுவிட்டு மின் கட்டணத்தை உயர்த்த வழிவகை செய்துள்ளது.

அம்மா ஆட்சியைப்போல், எடப்பாடியார் ஆட்சியைப் போல், மின் கட்டணத்தை உயர்த்தாமல் ஆட்சி செய்ய முடிந்தால் ஆட்சி செய். இல்லையெனில் பதவி விட்டு இறங்கி போ என்பதை வலியுறுத்தி தான் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கழக ஆட்சியின் போது இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் தான் இப்பொழுதும் உள்ளனர். கழக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால், அதே அதிகாரிகள் தற்போது திமுக ஆட்சியில் உள்ள நிலையில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றால் தான் ஆட்சி நடத்த முடியும் என்றால் உங்களுக்கு எதற்கு ஆட்சி?

திமுக கொடுத்த 525 வாக்குறுதிகளில் மின்கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்ற வாக்குறுதியும் ஒன்று. அரசியல் ஆண்மை இருந்தால் மின் கட்டணத்தை உயர்த்தாமல் ஆட்சி செய்ய வேண்டியது தானே? கையாலாகாத அரசு. திமுக அரசு ஸ்டாலின் அரசு.

மின்சார வாரியத்தில் எவ்வித முன்னறிவிப்பின்றி ஒரு லட்சம் பேரை வேலைக்கு சேர்க்கின்றனர். இது எதற்கு என்றால் மின்சார வாரியத்தை தனியாருக்கு அதுவும் தயாநிதிமாறனுக்கு கொடுக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அதற்காகத்தான் மின் கட்டணத்தை உயர்த்துகின்றனர். இது உண்மையாக இருந்தால் தவறு. தனியார் வசம் மின்வாரியத்தை ஒப்படைக்க கூடாது.

டெல்லியில் நடைபெற்ற நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் நமக்கு பாதாள அடி விழுந்துள்ளது. அரிசி, பருப்பு, கேழ்வரகு, கோதுமை, பால், தயிர், பால்கோவா போன்றவற்றிற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி உயர்த்துகின்றனர்.

கடந்த 10 வருடங்களில் கழக ஆட்சியின் போது மத்திய அரசு ஜி.எஸ்.டி.வரி உயர்த்த சொல்லியும் அம்மா ஆட்சியிலும், எடப்பாடியார் ஆட்சியிலும் ஜிஎஸ்டி வரி உயராமல் பார்த்துக் கொண்டார்கள். அடித்தட்டு மக்கள் ஜிஎஸ்டி வரி உயர்வால் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாவார்கள் என்பதால் ஜிஎஸ்டி வரி உயர்வை ஏற்றவில்லை.

ஆனால், ஸ்டாலினின் பிரதிநிதியாக சென்ற நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி வரி உயர்வை ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால் அரிசி விலை உயர வாய்ப்புள்ளது. வருமானத்திற்கு வழியில்லாத சூழ்நிலையில் நமது வயிற்றில் நேருக்கு நேர் அடிக்கப் போகிறார்கள்.

கழக ஆட்சியில் சொத்து வரி உயர்த்தவில்லை. ஆனால், தற்போது ஸ்டாலின் ஆட்சியில் 150 சதவீதம் சொத்துவரி உயர்த்தியுள்ளனர். இதனால் வீட்டு வரி, காலி மனை வரி, வரிக்கு மேல் வரி போட்டு கடுமையாக உயர்த்தி உள்ளனர்.

மேலும், வீடு கட்டுவதற்கான சிமெண்ட், கம்பி, கல், மரம் மற்றும் கட்டுமான பொருட்கள் விலை ஏறி போய்விட்டது இதனால் வீடு கட்ட முடியுமா? ஆதிதிராவிட மக்கள் மானியம் பெற்று வீடு கட்ட நினைத்தால் வீடு கட்ட முடியவில்லை. திட்டங்கள் போட்டாலும் விலைவாசி உயர்வால் வீடு கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நூல் விலை உயர்ந்துள்ளதால் ஜவுளி துணி விலையும் உயர்ந்துள்ளது. மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசியும் உயர்ந்துள்ளது. ஸ்டாலின் தான் வர்ராரு விடியல் தரப்போறாரு என வீதி வீதியாக பாடினார்கள். இந்த ஒன்றரை வருடத்தில் விடியாத ஆட்சி தான் நடைபெறுகிறது. இன்னும் மூன்றரை வருட காலம் இந்த ஆட்சிக்கு உள்ளது. என்ன கதிக்கு தமிழக மக்கள் ஆளாக போகிறார்களோ தெரியவில்லை.

தற்போது செஸ் விளையாட்டிற்காக ஆயிரக்கணக்கான கோடியில் செலவு செய்துள்ளார்கள். இது தமிழகத்திற்கு தேவையில்லை. அந்த பணத்தைக் கொண்டு அரிசி, பருப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்கலாமே.

தி.மு.க கொடுத்த வாக்குறுதியில் மாதந்தோறும் இல்லத்தரசிக்கு ரூ.1000 கொடுப்பேன் என்றார்கள். வழங்கவில்லை. ஏன் கொடுக்கவில்லை என்று கேட்டால் நிதி அமைச்சர் எந்த தேதியில் எந்த மாதத்தில் தருகிறோம் என்று சொன்னோமா என்று கோபத்துடன் பதில் அளிக்கிறார். நீட் தேர்வை ரத்து செய்வோம் என உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறினார்.

நீட் தேர்வின் ரத்து செய்வதற்கான ரகசியம் எனது அப்பா ஸ்டாலினுக்கு தெரியும். அந்த ரகசியத்தை இப்போது சொல்ல மாட்டேன் என்று பொய் பிரச்சாரம் செய்தார். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சியால் ஏராளமான மாணவ,மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர்.

பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்றார்கள். ஆனால், பெட்ரோலுக்கு மட்டும் ரூ.3 மட்டுமே குறைத்துள்ளனர். குறைவாக வாங்குகிற சம்பளத்தில் பெட்ரோல் செலவு அதிகமாக செல்வதால் குடும்பத்தை நடத்த முடியாமல் அடித்தட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அம்மா ஆட்சியில் ஏழைத் தாய்மார்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக தாலிக்கு தங்கம் வழங்கினார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது.இதுகுறித்து எடப்பாடியார் சட்டசபையில் கேட்டபோது பதில் அளித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரு தாலிக்கு தங்கம் வழங்க எங்களிடம் யாருமே மனு கொடுக்கவில்லை என்றார்.
அண்ட புளுகு ஆகாச புளுகு கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஜமுக்காளத்தில் வடிகட்டின புளுகை அவிழ்த்து உள்ளது இந்த திமுக ஆட்சி.

அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்வோம் என கூறிவிட்டு 15 லட்சம் பேருக்கு மட்டுமே நகை கடன்களை தள்ளுபடி செய்துள்ளனர். மற்றவர்களுக்கு சில சட்ட விதிகளை கூறி தள்ளுபடி செய்ய முடியாது என கூறிவிட்டனர். அம்மா ஆட்சியில் வழங்கப்பட்ட பெண்களுக்கான மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தையும் நிறுத்திவிட்டனர். அம்மா ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டு வருகிறது.

இளைஞர்கள் மது, கஞ்சா, மாத்திரைகளுக்கு அடிமையாகி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதே போன்ற சூழ்நிலை நிலவி வருவது வேதனைக்குரியது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்ததையடுத்து பள்ளி சூறையாடப்பட்டது. இதுகுறித்து உளவுத்துறைக்கும் காவல்துறைக்கும் நன்றாக தெரிந்திருந்தும் அதனை தடுக்கவில்லை. தமிழகத்தில் காவல்துறை செயல்படுகிறதா? என உயர் நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது.

அம்மா இருந்த இடத்தில் மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் தனது அடியாட்களுடன் அலுவலகத்தை சூறையாடியதை எந்த தொண்டனாலும் ஏற்க முடியாது.கலவரத்தில் ஈடுபட்ட இருவர் மறுநாளே உயிரிழந்துள்ளனர். இருவருக்கு கால் உடைந்துள்ளது. அரசன் அன்று கொள்வான்.

தெய்வம் நின்று கொள்ளும் என்பதற்கு இதுவே சாட்சி. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியாரின் சக்தி உள்ளது என்பதை நிரூபித்துள்ளது.
தற்போது கட்சி அலுவலகத்தின் சாவி எடப்பாடியுரின் வசம் ஒப்படைக்க வேண்டும் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வந்துள்ளது. இவையெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கான சாட்சி.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்துவோம் என்றனர். அதனை நம்பி திமுகவிற்கு கடந்த தேர்தலின் போது வாக்களித்தனர். ஆனால், இன்று அரசு அதிகாரிகளும், ஆசிரியர்களும் விழி பிதுங்கி போய் உள்ளனர். திமுகவிற்கு வாக்களித்தது எண்ணி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேதனை அடைந்து உள்ளனர்.

கருணாநிதி பேனா வடிவில் 134 அடி உயரத்தில் ரூ80 கோடி செலவில் வைக்கப் போகிறார்களாம். கருணாநிதிக்கு ஏற்கனவே அரசு பணத்தில் நினைவுச்சின்னம் வைக்கப்பட்டுள்ளது. தற்போது பேனா வடிவில் சின்னம் தேவையா? விலைவாசி தாறுமாறாக ஏறிப் போய் கொண்டுள்ள சூழ்நிலையில் அரசு பணத்தை எடுத்துக்கொண்டு இது போன்ற செயலில் எல்லாம் ஈடுபடுகின்றனர்.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் போது பணம் பாதாளம் வரை பாய்ந்தது. இதனால் திமுக வெற்றி பெற்றது. இந்த ஒன்றரை வருட காலத்தில் புதிதாக எந்த சாலையும் அமைக்கப்படவில்லை. எந்த வேலையும் நடைபெறவில்லை. மாநகராட்சி மேயராக உள்ள இளமதியின் வார்டில் உள்ள கோவில் திருத்தலங்கள் நிறைந்த பகுதியில் நகர் முழுவதும் சேகரிக்கப்படுகின்ற குப்பைகளை அங்கு தான் கொட்டுகின்ற அவல நிலை உள்ளது.

உள்ளாட்சிப் பணிகளுக்கு என எந்தத் தொகையும் மாநில அரசு ஒதுக்கப்படவில்லை. நான் அமைச்சராக இருந்த பொழுது திண்டுக்கல் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளுக்கு போடப்பட்ட சாலை தான் இன்று வரை உள்ளது. எந்தப் பணியும் நடைபெறவில்லை.

கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் சட்டப்படி நடைபெற்று வருகின்றன. கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கேபழனிசாமி தேர்வு செய்யப்பட்டவுடன் கழக பொருளாளராக என்னை நியமனம் செய்தார். ஆனால், வங்கியில் பண பரிவர்த்தனை செய்யக்கூடாது என ஓபிஎஸ் மனு அளித்தார்.

வங்கி என்னென்ன சான்றிதழ்கள் கேட்டதோ அத்தனையும் வழங்கிய பின்னர் தான் வரவு செலவு செய்ய என்னை அனுமதித்துள்ளனர். மறுபடியும் ரிசர்வ் வங்கிக்கு தபால் எழுதுகிறார். ஏதாவது குழப்பத்தை உண்டு பண்ண பார்க்கின்றார். கட்சியில் நீக்கப்பட்டவர்கள் எல்லாம் சேர்த்துக்கொள்ளப்படும் என்கிறார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது ரத்தம் எல்லோர் உடலிலும் ஓடிக்கொண்டிருக்கிறது என நினைத்தோம். ஆனால் ஒவ்வொரு விஷயமாக கேள்வி கேட்டு அதிமுகவை காட்டிக் கொடுக்கின்ற வேலையை ஓபிஎஸ் செய்து வருகிறார். இந்தத் தொல்லை நீங்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தினோம். ஒரே ஒரு பொதுச் செயலாளர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை போல், புரட்சித்தலைவி அம்மாவைப் போல் வேண்டும் என்றோம்.

நான்கரை வருடமாக சிங்கத்தின் மறு உருவமாக எடப்பாடியார் சிறப்பாக ஆட்சி புரிந்தார். நீட் தேர்வு பெறுவதற்காக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளித்தார். அதற்கான கல்வித் தொகையையும் இலவசமாக வழங்கினார்.

குடிமராமரத்து பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. இவ்வளவு சிறப்பாக ஆட்சி புரிந்ததால் தான் அம்மா எதிர்க்கட்சியாக இருந்த பொழுது 60 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். தற்போது 75 எம்எல்ஏக்கள் உள்ளனர். 72 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். ஓபிஎஸ் கட்சி ஆரம்பித்து மாவட்ட செயலாளர்கள் என்ன மாநில செயலாளர் கூட போடட்டும்.

இருவரையும் சமாதானம் செய்ய மேலிடம் முயற்சி செய்கிறது என கூறுகின்றனர். சமாதானம் என்ற பேச்சு எடப்பாடியாரின் வாழ்க்கையில் கிடையாது. கட்சியை காட்டிக் கொடுத்த கயவர்களுக்கு இனி இடம் கிடையாது.

துரோகி ஓபிஎஸ் கூட்டத்தை இனி அனுமதிக்கவே மாட்டார்கள். நாம் நாமாக சிங்கமாகவே இருப்போம். விரைவில் வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழக மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தி வருகின்ற திமுக அரசுக்கு சம்மட்டி அடி கொடுப்போம். இப்படை தோற்கின் எப்படையின் வெல்லும் நாம் இருக்கிற வரை எவராலும் நம்மை அசைக்க முடியாது.