ஸ்டாலினுக்கு நிர்வாக திறமை இல்லை – கே.பி.முனுசாமி கடும் தாக்கு

கிருஷ்ணகிரி,
தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணம் தி.மு.க. அரசு தான் என்றும் ஸ்டாலினுக்கு நிர்வாக திறமை இல்லை என்றும் கழக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறி உள்ளார்.
மின்கட்டணம் மற்றும் சொத்துவரியை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், நேற்று நடந்தது.
கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனிவெங்கடப்பன், சமரசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சரும், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி பேசியதாவது:-
கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் 100 யூனிட் மின்சாரம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய தி.மு.க., அரசு மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளது. கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தமிழக மக்களின் மின்தேவைக்கு போக உபரி மின்சாரம் வெளியில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் விடியா தி.மு.க., ஆட்சியில் தமிழக மக்களுக்கே மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டு அடிக்கடி அறிவிப்பு இல்லாமல் மின்தடை செய்யப்படுகிறது.
காரணம் நிர்வாகத்திறன் இன்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஸ்டாலினுக்கு வேலை வாங் தெரியவில்லை. இதேபோல், ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பால் பொதுமக்கள் பொருளாதாரத்தை இழந்துள்ள நிலையில், சொத்துவரியை உயர்த்தி உள்ளது மேலும் வேதனை அளிக்கும் செயல். எனவே மின்கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பேசினார்.