எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக அரியணை ஏறுவார்

சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாசலம் பேச்சு
சேலம்,
தி.மு.க ஆட்சியில் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்றும் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக அரியணை ஏறுவார் என்று சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாசலம் கூறி உள்ளார்.
சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு என மக்களை வாட்டி வதைத்து வரும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட கழக அவைத்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.செல்வராஜூ, சக்திவேல், ரவிச்சந்திரன், மாநகர் மாவட்ட கழக பொருளாளர் பங்க் வெங்கடாஜலம், முன்னாள் மேயர் சவுண்டப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.வெங்கடாஜலம் பேசியதாவது:-
விடியா தி.மு.க. ஆட்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் தேர்தல் வாக்குகளை நிறைவேற்றாத அரசாக உள்ளது விடியா தி.மு.க. அரசு, தமிழகத்தில் கழக ஆட்சியின் போது எடப்பாடியார் முதல்வராக நான்காண்டு காலம் பதவி வகித்தார்.
அப்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. ஏழை எளிய மக்கள் பாதிக்காதவாறு விலைவாசி உயர்த்தாமல் பொற்கால ஆட்சி செய்தார். தற்போது விடியா தி.மு.க. ஆட்சியில் சொத்துவரி, மின்சார கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என ஏழை மக்களை பாதிக்கும் அளவுக்கு உயர்த்தியுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் மூலம் குட்கா மற்றும் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுகிறது. கள்ளக்குறிச்சி சம்பவம் காவல்துறை முன்கூட்டியே தடுத்து இருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சினை வந்திருக்காது.
இதனால் இந்த விடியா தி.மு.க. அரசின் முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் பதவி விலக வேண்டும். சேலம் மாநகராட்சி பகுதியில் பல்வேறு திட்டப்பணிகளை கழக ஆட்சியின்போது எடப்பாடியார் நிறைவேற்றினார்.
தற்போது தி.மு.க. ஆட்சியில் ஒரு பணியும் நடைபெறவில்லை. சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது பல்வேறு பாலங்களை கட்டினார். இதுபோல பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கு மீண்டும் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக அரியணை ஏறுவார்.
இவ்வாறு சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.வெங்கடாஜலம் பேசினார்.