தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்கள் விருப்பம் -முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு

விருதுநகர்,
மக்களை பற்றி ஸ்டாலின் கவலைபடுவதில்லை. எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் என்ற சிவகாசியில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து
விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிவகாசி பாவாடி தோப்பு பகுதியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
அம்மாவுடைய காலத்துக்கு பிறகு தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் எடப்பாடியார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்வு கிடையாது, மின் கட்டண உயர்வு கிடையாது, பஸ் கட்டணம் உயர்வு கிடையாது, விலைவாசி உயர்வு கிடையாது. ஏழைகளை பாதிக்கின்ற எந்த செயலையும் அம்மாவுடைய அரசு செயல்படுத்தவில்லை.
இன்றைக்கு ஆளுகின்ற திமுக அரசு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களைப் பற்றி கவலைப்படாமல் விலைவாசி உயர்வு பற்றி கவலைப்படாமல் விளையாட்டு மோகத்தில் இருக்கின்றார். விளையாட்டுப் போட்டிகளுக்கு போஸ் கொடுத்து கண்டு களிக்கின்றார்.
சிவகாசி மாநகராட்சியில் கூலித்தொழிலாளர்கள், பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் அதிகம் வாழ்கின்றனர். இன்றைக்கு திடீரென்று மின் கட்டணம், சொத்து வரியை நீங்கள் உயர்த்தினால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மின்கட்டணம் உயர்வு, சொத்து வரியை உயர்வை உடனடியாக திமுக அரசு திரும்பப் பெற வேண்டும்.
சிவகாசியில் தற்போது பட்டாசு, தீப்பெட்டி தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றது. இதில் மின்கட்டணம் உயர்வு, சொத்து வரியை நீங்கள் கூட்டினால் பெரிய பாதிப்பை சிவகாசி மக்கள் சந்திப்பார்கள். மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீப்பெட்டித் தொழில் முற்றிலும் முடங்கி போய் உள்ளது.
இன்று பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டு இருக்கின்ற நெருக்கடியான சூழ்நிலையை யாருமே கண்டு கொள்ளவில்லை. பட்டாசு, தீப்பெட்டி, விவசாய தொழிலையோ யாருமே கண்டு கொள்ளவே இல்லை. பட்டாசு தொழிலாளர்கள் வேலை இன்றி வீதியில் நிற்கின்றனர். பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் பாதிப்பு பற்றி டெல்லியில் போய் பேசுவதற்கு இங்குள்ள அமைச்சர்களுக்கு திராணி கிடையாது.
இருப்பதை சுருட்டிக் கொண்டு ஓடி விடுவோம் என்று நினைப்பில் தான் ஆட்சி நடத்துகின்றனர். எந்தவிதமான நல்லவிதமான மக்கள் திட்டங்களை செய்வது கிடையாது. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சிறுமைப்படுத்தி மத்திய அரசை கேவலப்படுத்துகின்ற வேலையில் தான் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசிடம் பேசி ஏராளமான நிதிகளை பெற்று தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவதற்கு திமுகவில் ஆள் இல்லை. இப்போது இருக்கின்ற நிலைமை மாற வேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் வேண்டும்.
அதற்கு அடித்தளமாக விளங்கக் கூடியவர்கள் தமிழக மக்கள். திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை சொல்லக்கூடிய விதமாகத்தான் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி, நடந்தால் வரி என எதற்கெடுத்தாலும் வரி விதித்தால் எப்படித்தான் சாப்பிடுவது. ஆளுகின்ற திமுக அரசு மக்கள் நலனில் கருத்தில் கொண்டு மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பட்டாசு, தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பால் விலை, ஆவின் விலை உயர்வு என எதையும் திமுக கூட்டணி கட்சி கேட்க தயாராக இல்லை. இதை எதிர்த்து கேட்கும் கட்சியாக அதிமுக மட்டுமே உள்ளது. இத்தகைய நிலை மாற வேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் வர வேண்டும்.
இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.