தற்போதைய செய்திகள்

கொரோனா தொற்றை தடுக்க மக்களின் முழு ஒத்துழைப்பு மிக மிக அவசியம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

கோவை

கொரோனா தொற்றை தடுக்க மக்களின் முழு ஒத்துழைப்பு மிக மிக அவசியம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கொரோனோ வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனோ வைரஸ் தொற்றை தடுக்க தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இன்றைக்கு அனைத்து மக்களுக்கும் எங்கேயும் இல்லாத அளவிற்கு உணவுப்பொருட்கள் ரேஷன் கடையில் வழங்கப்படுகிறது. அதே போல உணவில்லாமல் யாரும் இருக்க கூடாது என்ற நோக்கில் சமுதாய உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டும், அம்மா உணவகம் மூலமும் தமிழ்நாட்டு மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க போர்க்கால அடிப்படையில் வைரஸ் தொற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு கோவை மாவட்டம் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

எந்த முதல்வரும் செய்யாத வகையில் நேரடியாக களத்தில் இறங்கி தமிழக முதல்வர் செயலாற்றி வருகிறார். குறிப்பாக கோவை மாவட்டத்திற்கு வருகை தந்து வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டத்துக்கு வந்த முதல்வர் ஒவ்வொரு துறை வாரியாக செய்துள்ள வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை தந்தார். அதுபோல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கோவை மாவட்டத்தில் 50 ஆண்டு கால வளர்ச்சியை ஐந்து ஆண்டுகளில் தந்து பல்வேறு திட்டங்களை கொடுத்து உள்ளார்.

கோவை மாவட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், உலகத்தரத்திற்கு இணையாக கோவை மாநகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டம், 1745 கி.மீ. நீளம் மழைநீர் வடிகால் வசதி, அத்திக்கடவு அவினாசித் திட்டம், அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை அதிவேக உயர்மட்ட பாலம், மெட்ரோ ரயில் திட்டம், கோவை விமான நிலைய விரிவாக்கம், – கோவை மாநகருக்கு 24X7 குடிநீர் திட்டம், குறிச்சி, குனியமுத்தூரில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள், ஆத்துப்பாலம் உக்கடம் வரை மேம்பாலம்,

காந்திபுரம் பகுதியில் இரண்டடுக்கு மேம்பாலம், பொள்ளாச்சி முதல் ஈச்சனாரி வரை உயர்தர நான்கு வழி சிமெண்ட் சாலை, நொய்யல் நதி புனரமைத்தல், மேற்கு புறவழிச்சாலை, வெள்ளலூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மாநில நெடுஞ்சாலைகளில் 10 பாலங்கள், புதிய எல்.இ.டி. விளக்குகள், அனைத்து சாலைகளும் விரிவாக்கம், கோவை பந்தயசாலையை மாதிரி சாலையாக அமைத்தல், 4 அரசு கலைக்கல்லூரிகள் என இன்னும் எண்ணிலடங்கா திட்டங்கள் தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோவை மாவட்ட மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

விவசாயியாக இருந்து முதலமைச்சரான, தமிழக முதலமைச்சர், குடிமராமத்து என்னும் மாபெரும் திட்டத்தை, சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார். இதன்மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏரிகள், குளங்கள், மற்றும் குட்டைகள் தூர்வாரப்பட்டு மறுமலர்ச்சி அடைந்து வருகின்றது. இதுபோல் கேட்கப்படும் திட்டங்கள் மட்டுமல்லாமல், தேவைப்படும் திட்டங்கள் அனைத்தையும் உடனுக்குடன் நிறைவேற்றித் தருகிறார்.

கோவை மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனையில் 149 மருத்துவர்கள், 146 செவிலியர்கள், 278 சுகாதாரப் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர். கோயம்புத்தூர் இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டினை வெளிப்படுத்தி வருகிறது.

ஊரடங்கு நேரத்தில் மே 25 முதல் விமானம் 131 விமானம் மூலம் இயக்கப்பட்டுள்ளது. இதுவரை 19 ஆயிரத்து 169 பயணிகள் விமானம் மூலம் வருகை புரிந்தார்கள். 111 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 46 நபர்கள் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 65 பேர் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 62 ஆயிரத்து 968 பேர் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 741 பேர்களுக்கு கரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. மருத்துவமனையில் 362 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மூன்று நபர்கள் பல்வேறு காரணங்களால் நோய் தொற்றினால் இறந்து உள்ளார்கள்.

வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 7672 பேர் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். கொரோனா தொற்று சிகிச்சைக்கென பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 400, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 405, வட்ட அளவிலான மருத்துவமனைகளில்; 471, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 240, தனியார் மருத்துவமனைகளில் 1,456, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 13 அரசு மருத்துவமனைகளில் 713, மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எவ்வித அறிகுறியும் இல்லாதவர்கள் என கண்டறியப்படுபவர்களுக்கு கொடீசியா உள்ளிட்ட 6 பகுதிகளில் 1000 படுக்கை வசதிகள் என மொத்தம் 4685 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

சுகாதாரத்துறை மூலம் நோய்த்தொற்று இருந்தால் தனிமைப்படுத்தி கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நோய்தொற்று கண்காணிக்க அலுவலகம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அதே போல ஒவ்வொரு வீடுகளிலும் நோய் அறிகுறி குறித்து ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் 13 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அந்த பகுதிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், உள்ளாட்சித் துறை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வாளையார் சோதனை சாவடியில் வருபவர்கள் 250 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோவை மாநகரம் முழுவதும் 300 வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளில் பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆரம்பத்திலிருந்தே சமூக இடைவெளி, முக கவசம் அணிவது போன்றவை மிக முக்கியம் என வலியுறுத்தி வருகிறார். ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு உயிரும் மிக மிக முக்கியம் என்ற அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், வளர்ந்த நாடுகளான அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த நோயினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை தமிழகத்தில் அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையால் இறப்பு சதவீதம் மிக குறைவாகவும் உள்ளது என தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவ்வப்பொழுது நோய் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்திற்கு இருசக்கர வாகனங்களில் வெளி மாநிலம், வெவ்வேறு மாவட்டங்களிருந்து பலர் வருகிறார்கள். அப்படி வருபவர்கள் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம். அதுபோல பொதுமக்களும் வெளி மாவட்டத்தில் இருந்து யார் வந்தாலும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம். அவர்களையும், அவர்களது குடும்பத்தையும் கண்டிப்பாக நாம் காப்பாற்றவேண்டும்.

நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட முடியாத சூழ்நிலையில் கூட தமிழக அரசு எடுத்துவரும் சிறப்பான நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த நேரத்தில் கூட அரசியல் செய்து வருகின்றனர். ஒரு சில எதிர்க்கட்சிகள் இந்த நொய் தொற்று குறித்து அரசியல் செய்து வருகிறார்கள். கோவையில் கூட ஒரு சிலர் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். ஆகவே கொரோனோவை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

ஏதாவது குற்றச்சாட்டை சொல்ல வேண்டும் என எதிர்க்கட்சியினர் எனது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கல்யாணம் என்கின்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். தயவு செய்து அரசியல் செய்யாதீர்கள். புரட்சித்தலைவி அம்மா அரசைப் பொறுத்தவரை தமிழகத்தில் நில அபகரிப்பு இல்லை, கட்டப்பஞ்சாயத்து எதுவுமில்லை, பொதுமக்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்து திட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்துள்ளார். அம்மா அவர்களின் வழியில் தமிழக முதல்வரும் என்ன திட்டங்களை கேட்டாலும் உடனே நிறைவேற்றி தந்து வருகிறார்.

எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு உயிரும் முக்கியம். முக கவசம் கண்டிப்பாக பொதுமக்கள் அணிய வேண்டும். முக கவசம் அணிந்திருந்தால் மட்டுமே ஒருவரிடம் பேச வேண்டும் என்று உறுதியாக இருங்கள். முக கவசம் அணிந்திருந்தால் 80 சதவீத தொற்றை தடுத்திட முடியும். மருத்துவத்துறை ஆலோசனைப்படி தான் முழு அடைப்பு செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நோய் தொற்று அரசின் தீவிர நடவடிக்கையால் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிகமான பரிசோதனை கோவை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு எங்களுக்கு அவசியம்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.