மதுரை

மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க ஆட்சி

கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கடும் தாக்கு

மதுரை,

மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க. ஆட்சி என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறி உள்ளார்.

சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கருப்பாயூரணியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சிறப்பான ஆட்சியை மக்களுக்கு அம்மா அரசு வழங்கியது. குறிப்பாக கடந்த நான்கரை ஆண்டு காலம் விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்தார் எடப்பாடியார். குறிப்பாக தமிழகத்தின் அனைத்து துறைகளையும் திறம்பட செய்து அதன் மூலம் வருவாயை நீட்டி மக்களை இந்த சிரமத்திற்கும் ஆட்படுத்தாமல் சிறப்பான மக்களாட்சியை எடப்பாடியார் நடத்தினார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தனர். அதில் வீட்டு வரியை உயர்த்த மாட்டோம், மாதம் ஒரு முறை மின்கட்டணத்தை நடைமுறைக்கு கொண்டு வருவோம் என்று கூறினார்கள். ஆனால் இன்றைக்கு ஆட்சிக்கு வந்த 14 மாதத்தில் தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையும் நிறைவேற்றாமல் தனக்கு வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் வகையில் சொத்து வரியை 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை தந்திடும் வகையில் 36 சதவீத மின் கட்டண உயர்வை தி.மு.க அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர்.

அது மட்டுமல்லாது ஆவின் விலை உயர்ந்துள்ளது. மேலும் கட்டுமான பொருட்கள் எல்லாம் 30 சதவீதம் விலை உயர்வு அதிகரிக்கிறது. இப்படி ஆட்சிக்கு வந்த 14 மாதங்களில் விலைவாசி உயர்வை தவிர வேறு எதையும் மக்களுக்கு திமுக அரசு வழங்கவில்லை.

இந்தியாவிலே தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக அம்மா ஆட்சியில் இருந்தது. தற்போது இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. அதேபோல் அதிகமான காவல்துறை மரணங்கள் அதிகரித்துள்ளது.

இதற்கெல்லாம் மேலாக நடைபெற்ற கள்ளக்குறிச்சி சம்பவம், நாள்தோறும் கொலை, கொள்ளை என்ற செய்தி தான் ஊடகங்களில் வருகிறது. காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் அதை திறம்பட செய்யவில்லை. ஆட்சிக்கு வந்த 14 மாதங்களில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசாக திமுக அரசு உள்ளது.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.