தற்போதைய செய்திகள்

மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க. அரசு-சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

மதுரை
விலைவாசியை உயர்த்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது விடியா ஆட்சி என்றும், மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க. அரசு என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக பேசினார்

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க அரசை கண்டித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவில் அருகில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். ஆனால் இன்றைக்கு மின் கட்டணத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது. கடந்த தேர்தல் அறிக்கையில் 505 தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க.வினர் அள்ளி வீசினர. குறிப்பாக மாதந்தோறும் மின்கட்டணத்தை கணக்கெடுப்போம் என்று கூறினார்கள். தற்போது ஆள் பற்றாக்குறை என்று காரணம் கூறுகிறார்கள்.

வேளாண் பணிகளுக்கு அம்மா ஆட்சியில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போது டெல்டா பகுதிகளுக்கு 12 மணி நேரமும், டெல்டா அல்லாத பகுதிகளுக்கு 9 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது.

அம்மா ஆட்சியில் மின்சாரம் கட்டணம் 170 ரூபாய், 300 யூனிட் மின்சாரம் கட்டணம் 530 ரூபாய், 400 யூனிட் மின்சாரம் 830 ரூபாய் ஆக இருந்தது. தற்போது தி.முக ஆட்சியில் மின் கட்டண உயர்வால் 200 யூனிட் மின்சாரம் 225 ரூபாய், 300 யூனிட் மின்சாரம் 675 ரூபாய், 400 யூனிட் மின்சாரம் 1,725 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறுகிறார் . குறிப்பாக 200 யூனிட் பயன்படுத்துவோர் 63.35 லட்சம் மின் நுகர்வோர்கள், 300 யூனிட் பயன்படுத்துவோர் 36.25 லட்சம் மின் நுகர்வோர்கள் ஆவார்கள்.

நெசவாளர்களுக்கு அம்மா ஆட்சி காலத்தில் 750 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது 750 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் நெசவாளர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 70 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நெசவாளர் மிகவும் பாதிப்படைவார்கள்.

தமிழகத்தில் நகர்ப்புறங்களில் 78 லட்சம் வீடுகள் உள்ளன. இதில் 600 சதுர அடி வீடுகள் எண்ணிக்கை 45.53 லட்சம் ஆகும். இவர்களுக்கு 25 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் 1200 சதுரஅடி உள்ள வீடுகளின் எண்ணிக்கை 19.23 லட்சம் ஆகும். இவர்களுக்கு 50 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ 83.18 சதவீதம் ஏழை, எளிய மக்கள் இதில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வாடகை வீட்டில் குடியிருப்போர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சொத்துவரி மூலம் அரசுக்கு 1750 கோடி ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைக்கும். இந்த வருவாயை மற்ற துறை மூலம் ஈட்டி மக்கள் சுமையை அரசு குறைத்து இருக்கலாம்.

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி நடைபெற்ற சம்பவம் தான் இந்தியாவில் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. உளவுத்துறை உரிய அறிக்கை குறித்தும் காவல்துறை செயல் இழந்து உள்ளது. காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் முறையாக வழிகாட்டவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு தற்போது இந்த விலைவாசி உயர்வு என்பது அவர்களின் வயிற்றில் அடித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. ஆகவே இந்த விலைவாசி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் பொறுப்பு ஏற்கும் போது இரண்டு பேருக்கு கொரோனா காய்ச்சல் ஏற்பட்டது. இதில் கூட ஒற்றுமையாக இருவருக்கும் வருகிறது. இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டனர். தமிழக மக்கள் இவர்களை தனிமைப்படுத்தும் விதமாக அச்சாரமாக அமைந்துள்ளது.

இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் பேசினார்.