சிறப்பு செய்திகள்

தயார் நிலையில் 15,000 படுக்கைகள்: முதல்வர் பேட்டி

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, தேனாம்பேட்டை மருத்துவப்பணிகள் இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :-

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் இந்த நோயினுடைய அறிகுறிகள் தெரிந்து வருகின்ற காரணத்தினாலே, இன்றைக்கு தமிழகத்திலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்புக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்காக 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொடிய நோய்

பாரதப் பிரதமரும் , 21 நாட்கள் தொடர்ந்து 144 தடை உத்தரவை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டார்கள். அதன் அடிப்படையிலே தமிழ்நாட்டிலும் அரசும், 21 நாட்கள் தொடர்ந்து 144 தடை உத்தரவை பின்பற்றப்படும். இந்த 144 தடை உத்தரவு காலத்தில், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வீட்டிலிருந்து வெளியே வந்து அந்தப் பொருட்களை வாங்கி செல்லலாம். மற்ற நேரங்களில் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். அப்போது தான், இந்த வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த முடியும். அதற்காகத் தான் 144 தடை உத்தரவு போடப்பட்டு இருக்கின்றன. மக்கள் கூட்டம் கூட்டமாக கூடக் கூடாது. தேவையில்லாமல் வெளியே செல்லக் கூடாது. அதேபோல, பெரியவர்களையும், குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் பாதுகாப்பாக வைத்துக் கெள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

ஒரே வழி தனிமைதான்

இன்றைக்கு சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை, வருவாய்த் துறை என அனைத்து துறைகளுமே பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஒலிபெருக்கியின் வாயிலாக நோயினுடைய தாக்கத்தை மக்களுக்கு எடுத்து சொல்லி வருகிறார்கள். அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இது ஒரு கொடிய நோய். இந்த நோயிலிருந்து நம்மை காக்க வேண்டும் என்று சொன்னால், அதற்கு ஒரே வழி தனிமைப்படுத்தி கொள்வது மட்டும் தான். ஆகவே, இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று இந்த தருணத்திலே கேட்டுக் கொள்கிறேன். அரசைப் பொறுத்தவரைக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிப் பொருட்களை கிடைப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

அரசு உரிய நடவடிக்கை

இன்றைக்கு காய்கறிகளோ, பழங்களோ, பாலோ, மளிகைச் சாமான்களோ, மருந்துப் பொருட்களோ எல்லா இடங்களிலும் தாராளமாக கிடைக்கின்ற சூழ்நிலையை அரசு உருவாக்கி தந்திருக்கிறது. ஆனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். இதுதான் மிகமிக முக்கியம். அதேபோல அரசு கிருமி நாசினிகளை எல்லா பகுதிகளிலுமே தெளித்து வருகின்றார்கள். குறிப்பாக மக்கள் நிறைந்த பகுதிகளிலே இந்த நோய் பரவாமல் தடுப்பதற்காக இந்த கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் இருக்கின்ற பெரிய ஊர்களில் எல்லாம் இந்த கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நோய் பரவாமல் தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை,கோவையில் சிறப்பு மருத்துவமனை

அதோடு இன்றைய தினம் அம்மாவுடைய அரசு, சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அதேபோல, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை ஆகிய இரண்டு மருத்துவமனைகளில் 850 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மருத்துவமனை முழுக்க முழுக்க நவீன வசதிகளுடன் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல சோதனைக் கூடம் அரசின் சார்பில் பத்தும், தனியார் சார்பில் நான்கும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சுமார் 1243 பரிசோதனைகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் 35 பேருக்கு இந்த சோதனையின் வாயிலாக நோயினுடைய அறிகுறிகள் தெரிந்து, சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையிலே சோக்கப்பட்டு இருக்கிறார்கள்.

வெளிநாட்டிலிருந்து

அதுமட்டுமல்லாமல் 277 பேர் சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டு அரசினுடைய கண்காணிப்பிலே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு சுமார் 15,000 பேர் வந்திருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டு இருக்கின்றன. அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு செய்து வருகிறது. அவர்கள் வீட்டிலேயே இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க காவல்துறை சிறப்பு ஏற்பாடுகள் செய்து கண்காணித்து வருகிறது. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு கையிலே முத்திரை குத்தப்பட்டு இருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து வந்து வீட்டிலே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. வெளியில் இருக்கின்ற யாரும் அவர் வீட்டிற்கு செல்லக் கூடாது. தனிமையில் இருப்பவர்களுக்கு நோயினுடைய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையிலே சேர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக மருத்துவக் கட்டுப்பாட்டு அறை இங்கே அமைக்கப்பட்டு இருக்கிறது. இரவு பகல் பாராமல் 200 மருத்துவர்கள் சேவை மனப்பான்மையோடு, அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு கொண்டு இருக்கின்றார்கள்.

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

காய்ச்சல் ஏதாவது இருந்தால் உடனடியாக இந்த கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தால், அவர்கள் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வார்கள். அதற்காக இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த கட்டுப்பாட்டு அறையிலே தொடர்புப் பிரிவு, ஒருங்கிணைந்த கண்காணிப்புப் பிரிவு, தொற்றுநோய் கண்காணிப்புப் பிரிவு, நிர்வாகப் பிரிவு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் பிரிவு, நோயாளர் தொடர்பு கண்காணிப்புப் பிரிவு, ஊடக பிரிவு என அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கி இந்த கட்டுப்பாட்டு அறை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

200 புதிய ஆம்புலன்ஸ்

எந்த ஒருவருக்கும் நோய் அறிகுறிகள் தென்பட்டாலும் இந்த கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான உதவியும் இந்த கட்டுப்பாட்டு அறையின் மூலம் செய்து கொடுக்கப்படும். அதுமட்டும் அல்லாமல், இன்றைக்கு உடனடியாக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1500 லேப் டெக்னிஷியன்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவசர காலங்களுக்காக 200 ஆம்புலன்ஸ்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. அதேபோல, டாயாலசிஸ் செய்ய வேண்டும் என்றால் 108 ஆம்புலன் சேவைக்கு அழைத்தால் போதும், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை மேற்கொண்டு அதே வாகனத்தில் அவர்கள் வீடு திரும்ப அனைத்து வசதிகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இருகரம் கூப்பி

இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்கு ஒரே வழி அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதுதான். நான் தெரிவித்த வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 144 தடை உத்தரவு என்பது அனைவரையும் பாதுகாப்பதற்காக, அவர்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும், குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், இந்த நாட்டையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அரசு எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இருகரம் கூப்பி இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்டேஜ் 1

கேள்வி : கொரோனா வைரஸ் ஸ்டேஜ் 1, 2,3, 4 என்று சொல்லுகிறார்கள் தமிழகத்தின் நிலை என்ன?

பதில் : தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஸ்டேஜ் 1ல் தான் இருக்கிறது. அது மீண்டும் அதிகரிக்கக்கூடாது என்பதற்காகத்தான் அரசு இது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

15,000 படுக்கை வசதிகள்

கேள்வி : இதற்கென தனியாக மருத்துவமனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது ?

பதில் : தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 15,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை, இ.எஸ்.ஐ மருத்துவமையில் 250 படுக்கை வசதியுடன் நவீன மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன கருவிகளுடனான சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும் அனைத்து வசதிகளுடன் கூடிய சிறப்புப் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒத்துழைக்க வேண்டும்

கேள்வி : அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்த போதிலும், மக்களிடையே பீதியும், தவறான கருத்துகளும் நிகழ்வதாக தெரிகிறது?

பதில் : அரசு எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்தாலும், ஊடகத்துறையினரும், தங்களால் முடிந்தவரை, தங்கள் பங்களிப்பை அளித்திட வேண்டும். கொரோனா என்பது மிகப்பெரிய கொடிய நோய் இதிலிருந்து மக்களை காப்பாற்றுவது அனைவருக்குமான கூட்டுப்பொறுப்பு எனவே அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

கேள்வி : கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் சோதனைக்கூடங்கள் எத்தனை உள்ளன?

பதில் : அரசுமருத்துவமனைகளில் உள்ள 10 சோதனைக் கூடங்களும், 4 தனியார் சோதனைக் கூடங்களும் என மொத்தம் 14 சோதனைக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கேள்வி : காவல் துறையினர் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது.

பதில் : காவல் துறையைப் பொறுத்தவரையில் 144 தடை உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது தான். அனைத்து ஊடகத்துறையினரும் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது நன்றாக தெரிந்துள்ளீர்கள். அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் மட்டுமே, பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். 144 தடை உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என்பது தான் இந்த அரசின் நிலைப்பாடு.

பிரச்சனையை தெரிவித்தால் தீர்வு

கேள்வி : புதுக்கோட்டை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வரப்பெற்றுள்ளது. அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில் : அதற்காகத்தான் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு என்ன மன அழுத்தம் உள்ளது என்பதை தெரிந்து அதை மருத்துவர்கள் தீர்த்து வைப்பார்கள். கட்டுப்பாட்டு அறையில் 7 பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. என்ன பிரச்சனை என்பதை அவர்களுக்குத் தெரிவித்தால், அதற்குண்டான வழிவகைகள் மேற்கொள்ளப்படும்.

தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி

கேள்வி : தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?

பதில் : அனைத்து வசதிகளுடன் கூடிய பெரிய மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அந்த மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.