நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம்-கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி.வேலுமணி திட்டவட்டம்

கோவை
மக்கள் விரோ ஆட்சி நடத்தும் தி.மு.க.வுக்கு விரைவில் முடிவு கட்டுவார்கள் என்றும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றிபெறுவோம் என்றும் கழக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாக கூறி உள்ளார்.
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து
கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாடடம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளர் செ.தாமோதரன் எம்.எல்.ஏ, வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ, கழக இளைஞரணி துணை செயலாளர் டிகே.அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழக அவை தலைவரும், கோ-ஆப்டெக்ஸ் வாரிய தலைவருமான ஏ.வெங்கடாசலம், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், பொள்ளாச்சி நகர கழக செயலாளருமான வி.கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடவுமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு, விலை வாசி உயர்வு என தினந்தோறும் தமிழக மக்களை பாடாய் படுத்தி வருகிறது மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுக. இனி அ.தி.மு.க அவ்வளவு தான் என திமுக நினைத்தது.
ஆனால் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்ட புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரின் ஆட்சியை 4 ஆண்டு காலம் சிறப்பாக நடத்திய பெருமை மிக்க எடப்பாடியார் ஒற்றை தலைமை மட்டுமல்ல ஒத்த தலைமையாக மக்கள் விரும்பும் தலைவராக கழகத்தை காத்து நிற்கிறார்.
தி.மு.க,வின் பொய் பிரச்சாரத்தால் சுமார் 1 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தோம். கடந்த 15 மாத கால திமுக ஆட்சியில் மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறீர்களா? எதுவுமே செய்யவில்லை காவல்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது என நீதிமன்றமே கேட்கிறது.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு படுமோசமாக உள்ளது. இதையெல்லாம் கவனிக்காமல் விட்டுவிட்டு ஓபிஎஸ் உடன் சேர்ந்து கொண்டு அதிமுக அலுவலகமான நமது கழகத்தின் கோவிலை திமுகவின் துணையுடன் ஓபிஎஸ் உடைத்திருக்கிறார்கள். உடனடியாக சீல் வைக்கிறார்கள்.
தி.மு.க.வின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் காத்திருக்கிறார்கள். கழக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தான் தொடங்கி வைக்கிறது திமுக. சட்டமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றியுள்ளார்களா?
புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த திட்டங்களை முடக்கி உள்ளது திமுக. திமுக தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது? இந்த ஆட்சி விளம்பரத்தால் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. கொரோனா காலத்திலிருந்து தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வரும் தமிழக மக்கள் மீது சொத்து வரியை 25 சதவீதம் முதல் 150 என உயர்த்தியுள்ளனர்.
கடந்த பத்து ஆண்டு காலமாக நாங்கள் உயர்த்தவில்லை. திமுக ஆட்சி வரும் போதெல்லாம் சொத்து வரியை உயர்த்தி உள்ளனர். மக்களை பற்றி சிந்திக்காத அரசு திமுக. எதை உயர்த்தினாலும் மத்திய அரசை காரணம் கூறுகிறார்கள்.
கள்ளக் குறிச்சி வன்முறை தி.மு.க ஆட்சியின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு சிறந்த எடுத்துக்காட்டு. உளவுத்துறை முழுமையாக தோல்வி அடைந்து விட்டது. இதுவரை அம்மாணவிக்கும் நியாயம் கிடைக்கவில்லை. இந்த ஆட்சி வந்த பிறகு கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை என அனைத்தும் அதிகரித்து விட்டது.
பொள்ளாச்சி பிரச்சினையில் உடனடி நடவடிக்கை வேண்டும் என்று முதலில் கூறியதே பொள்ளாச்சி ஜெயராமன்.
தேர்தலுக்காக ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஆகியோர் நாடகம் நடத்தினர். இப்போது கனிமொழி எங்கே? உதயநிதி எங்கே? மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஆர்ப்பாட்டம் நடத்தினால் உடனே வழக்கு போடுவது தான் திமுகவின் வேலை. வழக்குகளைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம்.
தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் தி.மு.க.வுக்கு நெருங்கி விட்டது. மக்களுக்காக போராடக்கூடிய ஒரே இயக்கம் அ.தி.மு.க தான். கோவை மாவட்டத்திற்கு கேட்ட திட்டங்கள் அத்தனையும் நிறைவேற்றி தந்தார் எடப்பாடியார். மக்களை பற்றி கவலைப்படாத சிந்திக்காத ஆட்சி தான் தி.மு.க.
இந்த ஆட்சிக்கு எடப்பாடியார் முற்றுப்புள்ளி வைப்பார். அ.தி.மு.கவை எப்படி நடத்த வேண்டும் என எடப்பாடியாருக்கு நன்றாக தெரியும். அனைத்து தொண்டர்களாலும், தமிழக மக்களும் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் எடப்பாடியார்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம். 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் முதல்வராக வருவார். தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டு உள்ள மக்களே தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவார்கள்.
இவ்வாறு கழக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி கொறடவுமான எஸ்பி.வேலுமணி பேசினார்.