தற்போதைய செய்திகள்

கட்சிக்கும், கோபாலபுரத்திற்கும் பயனளிக்கும் திட்டங்களையே தி.மு.க. அரசு கொண்டு வரும்

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடும் தாக்கு

மயிலாடுதுறை

கட்சிக்கும், கோபாலபுரத்திற்கும் என்ன லாபம் கிடைக்கும் என்று கணக்கு போட்டுத்தான் திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வரும் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறி உள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கழக வளர்ச்சி பணி குறித்து நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக அவைத்தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர கழக செயலாளர் எல்.வி.ஆர்.வினோத் வரவேற்புரையாற்றினார்.

கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.கே.சந்திரசேகரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆதமங்கலம் கே.ரவிச்சந்திரன், வைத்தீஸ்வரன் கோவில் பேரூர் கழக செயலாளர் போகர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக அமைப்பு செயலாளரும், நாகை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ, மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ், மாவட்ட துணை செயலாளர் வா.செல்லையன், மாவட்ட மகளிரணி செயலாளர் மா.சக்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், நாகை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ பேசியதாவது:-

இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீது என்ன பொய் வழக்கு போடலாம் என துருவி துருவி பார்க்கிறது விடியா தி.மு.க. அரசு. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார், ஸ்டாலின் அவர்களே நான் பழைய பழனிச்சாமி என்று எண்ணி விடாதீர்கள் என எச்சரித்தார்.

தி.மு.க ஒரு திட்டத்தை அமல்படுத்துவது என்றால் இந்த திட்டத்தால் கட்சிக்கு என்ன லாபம். கோபாலபுரத்திற்கு என்ன லாபம் என கணக்கு போட்டு திட்டத்தை தி.மு.க கொண்டு வரும். ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் இந்த சமுதாயத்துக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்தவர்கள்.

உதாரணமாக தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கொண்டு வர முடியாத சூழ்நிலையில் அரசு பள்ளியில் படித்திருக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தார். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவம், பல் மருத்துவம் என 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.

அதோடு மட்டுமில்லாமல் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவித்தவர் எடப்பாடியார். ஆனால் விடியா தி.மு.க. அரசு என்பது கருணாநிதி காலத்தில் சரி, ஸ்டாலின் காலத்திலும் சரி மக்களுக்கு பயன்படாத ஒத்துப்போகாத திட்டங்களை தான் கொண்டு வந்திருக்கிறது.

சட்டமன்ற உறுப்பினருக்கான நிதி ஏப்ரல் மாதம் பட்ஜெட் அறிவித்த நிலையில் 5 மாத காலம் ஆகியும் 5 பைசா கூட எந்த சட்டமன்ற உறுப்பினர் நிதியும் வரவில்லை. கையாலாகாத விடியா தி.மு.க. அரசு என அ.தி.மு.க.வை குறை சொல்கிறது. விடியா தி.மு.க அரசு தற்போது நிதியை பெருக்க முடியாமல் ைகேயந்தும் நிலைக்கு சென்று இருக்கிறது.

ஒன்றிய அரசு, ஒன்றிய அரசு என கூவிய தி.மு.க உலக செஸ் போட்டி தொடக்க விழாவுக்கு வந்த பிரதமரை ஒன்றிய அரசின் பிரதமர் என்று சொல்லாமல், இந்திய பிரதமர் என கூறினார். ஸ்டாலின் இப்பொழுது மத்திய அரசு எனக்கூறியதை காலில் விழுந்ததாக எண்ணுவதா அல்லது கையை பிடித்ததாக எண்ணுவதா,

நடிக்கிற கட்சி தி.மு.க. திரை உலகத்தில் நடித்து புகழ் பெற்ற எம்.ஜி.ஆர் ஆட்சியில் மக்கள் முன் நடிக்காதவர் புரட்சிதலைவர். ஆனால் நடிக்காத தி.மு.க.வினர் இன்று மிகப்பெரிய நடிகராக நடிக்கிறார்கள். தமிழகத்தில் இப்போது சட்டம், ஒழுங்கு சீர்கேடால் லாக்கப் மரணம், பாலியல் மரணம், பாலியல் சீண்டல், தற்கொலை தலைவிரித்து ஆடுகிறது

இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி நடத்துகிற மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் நான் தான் என அவரே கூறிக்கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. மேலும் விவசாயம், மீன்வளம், மற்றும் எந்த துறையாக இருந்தாலும் தி.மு.க அரசு நாமம் தான் போடுகிறது.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், நாகை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ பேசினார்.