கிருஷ்ணகிரி

333 ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு பணிகள் தீவிரம் – கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்

கிருஷ்ணகிரி:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.சு.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை வளாகம் மற்றும் மருத்துவமனை கட்டிடங்களுக்கு தீயணைப்புத்துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சு.பிரபாகர் நேரில் பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் உத்தரவின்படி நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனோ வைரஸ் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர் மாநகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகள் மற்றும் கிராம ஊராட்சி அளவில் தினந்தோறும் கிருமி நாசனிகள் தெளிக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி நகராட்சியில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், உழவர் சந்தை, நீதிமன்ற வளாகம், நீதிமன்ற குடியிருப்புகள், மற்றும் 33- வார்களில் தினந்தோறும் சுழற்சி முறையில் 30- பணியாளர்களை கொண்டு 12 கை பம்புகள் , டி.வி.எஸ். நிறுவனம் வழங்கிய 3- பவர் ஸ்பிரேயர் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. தீயணைப்புத்துறை வானம் மூலம் தினந்தோறும் 2- முறை அரசு தலைமை மருத்துவ மணையில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

ஓசூர் மாநகராட்சியில் உள்ள 40 வார்டுகள் உள்ளிட்ட மத்திகிரி, பேருந்து நிலையம், அனைத்து மருத்துவ மணைகள், அரசு மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகள் நாள்தோறும் தீயணைப்புத்துறை வாகனம், தன்ஞ்செயா ஓட்டல் நிர்வாகம் வழங்கிய அதிநவீன இயந்திரம், டி.வி.எஸ். மோட்டார் வழங்கிய 6- ஸ்பிரேயர், ஓசூர் மாநகராட்சியின் சார்பாக 6- டிராக்டர், ஸ்பிரேயர் 6- மற்றும் 100 கைதெளிப்பான் கொண்டு 750 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்

சுழற்சி முறையில் 150 பணியாளர்கள் வீதம் மூன்று சிப்ட்டாக பணியாற்றி வருகிறார்கள். மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சியில் 464 பவர் ஸ்பிரேயர் கொண்டு கிருமிநாசினி தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஊராட்சி செயலர்கள் 304 நபர்களும், துப்புரவு பணியாளர்கள் 573 நபர்களும், தூய்மை காவலர்கள் 2150 , மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்பவர்கள் 884 நபர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் 832 நபர்களும், மஸ்தூர்கள். 380 நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க இப்பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீட்டை விட்டு யாரும் வெளியே வரகூடாது. அதேப்போல செய்தியாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சு.பிரபாகர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் பரமசிவன், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முத்துசெல்வன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சேகர் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.