தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்-முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு

மயிலாடுதுறை

விடியா தி.மு.க. ஆட்சியில் ஆளுமை இல்லை, நல்ல வழிகாட்டுதல் இல்லை என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக அரசை அமைப்போம் என்று சூளுரைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார்கோயில் ஒன்றியம் செல்வம் சதுக்கத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஜெனார்த்தனம் தலைமையில் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஜி.கண்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

குத்தாலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.எஸ்.மகேந்திரவர்மன், குத்தாலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.இளங்கோவன், சீர்காழி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.கே.சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கபடி ஆர்.பாண்டியன், தரங்கம்பாடி பேரூர் கழக செயலாளர் ஜி.கிருஷ்ணசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், நாகை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ பேசியதாவது:-

பேரறிஞர் அண்ணா தனது அறிவாற்றலால், அடைமொழியால் தமிழக மக்களை மட்டுமல்ல அயல்நாட்டு வரையும் திரும்பிப்பார்க்க வைத்தவர். ஒரு மாபெரும் சரித்திரம் படைத்த தலைவர். அண்ணா பேசிய வார்த்தைகள் பொன்மொழிகளாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

ஒருமுறை லண்டனில் அவர் உரை நிகழ்த்தியபோது ஐந்தாம் போபால் அண்ணாவின் ஆங்கில உரையை பார்த்து அசந்துபோய் மேலும் சில நிமிடங்கள் பேச சொன்னார். அப்போது போர்த்துகீசியர் சிறையில் கைதியாக இருந்த ரானாடே என்ற சுதந்திர போராட்ட தியாகியை விடுதலை செய்யக்கோரி போபால் இடம் கேட்டார். இந்த செய்தி உலகையே வியக்க செய்தது.

இருபத்தி ஆறு ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட வரை இந்தியாவின் கடைக்கோடி மாநிலத்திலிருந்து சென்றவர் மீட்டார் என்ற செய்தி உலகம் முழுவதும் பரவியது. அத்தகைய திறமை படைத்தவர் பேரறிஞர் அண்ணா. இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தி காட்டியவர் பேரறிஞர் அண்ணா.

அவ்வழியில் வந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சென்னையில் உலகத்தமிழ் மாநாடு நடத்தியவர். புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தஞ்சாவூரில் உலக தமிழ் மாநாட்டை நடத்திக்காட்டியவர்.

ஆனால் கருணாநிதி ஒரு மாநாடாவது நடத்தி காட்டி இருப்பாரா.” இல்லவே இல்லை. கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது செம்மொழி மாநாடு என்று ஒரு மாநாட்டை நடத்தினார். அது செம்மொழி மாநாடா? கனிமொழி மாநாடா? என்று உங்களுக்கே தெரியும்.

ஒட்டுமொத்த தமிழின் இலக்கண, இலக்கியங்களை கற்று தெளிந்தவர் பேரறிஞர் அண்ணா. 18 மாதங்கள் முதல்வராக இருந்தாலும் உலகம் பேசும் எண்ணற்ற செயல்களை செய்தவர் பேரறிஞர் அண்ணா. தமிழக அரசியலில் ஐயா, ஐயா என்ற சொல்லை மாற்றி அண்ணன், தம்பி என்ற அழைப்பு சொல்லை அனைவரையும் சொல்ல வைத்தவர் பேரறிஞர் அண்ணா.

பாகுபாடு இல்லாத மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த தலைவர்கள் மத்தியில் விடியா தி.மு.க. அரசின் நிலைப்பாடு என்ன? ஒன்னே முக்கால் சத்துணவு தற்போது பன்னிரண்டே முக்கால் உணவாக மாறிய கொடுமை ஏன் இந்த பாகுபாடு. விடியா தி.மு.க. ஆட்சியில் ஆளுமை இல்லை, நல்ல வழிகாட்டுதல் இல்லை,

அதாவது இந்த விடியா தி.மு.க ஆட்சியில் வீட்டிற்கு வரி, வீட்டுக்கு மட்டுமல்ல வரி எல்லோரும் நல்லா புரிந்து கொள்ளுங்கள். வீட்டிற்கு பக்கத்தில் உள்ள காலி மனைக்கும் வரி. என்ன அநியாயம். இப்படி பல்வேறு நிலைகள் மாறி நல்லாட்சி மலர, அண்ணா.தி.மு.க. என்பது பில்டர் காபியாக மாறி. அழுக்குகளை எல்லாம் வடிகட்டி சுத்தம் செய்து விடும்.

எனவே மீண்டும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆட்சி அமைந்திட எடப்பாடியார் பல்வேறு மக்கள் நலப்பணிகளை ஆற்றிட ஒன்று சேர்வோம். அ.தி.மு.க அரசை தமிழகத்தில் கொண்டு வருவோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.