தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சிகளை பழிவாங்க காவல்துறையை ஏவல்துறையாக்கி விட்டது தி.மு.க. அரசு

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை,

எதிர்க்கட்சிகளை பழிவாங்க காவல்துறையை ஏவல்துறையாக்கி விட்டது விடியா தி.மு.க. அரசு என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-

கேள்வி : கடந்த ஆட்சியில் சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் போதைப் பொருட்கள் அதிகரிக்க காரணம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாரே

பதில் : தன்னுடைய இயலாமையை அடுத்தவர் மீது போட்டு பழியை சொல்வது. இதைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறர். எங்கள் ஆட்சியில் இதுபோன்ற நிலைமை இருந்ததா. பத்திரிகையை எடுத்து பாருங்கள். நாங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கினோம். அம்மா இரும்புக்கரம் கொண்டு அடக்கினார்.

போதைப்பொருட்களை கடத்துபவர்கள், சட்டம் ஒழுங்கை கையில் எடுப்பவர்கள், சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள், கந்துவட்டி இப்படி எல்லோரையும் கைது செய்து, சட்டம் ஒழுங்கை பராமரித்து தமிழகத்தை அமைதி பூங்கா என்ற நிலையை உருவாக்கி, இந்தியாவிலேயே அமைதி பூங்கா என்ற மாநிலம் தமிழ்நாடு, அமைதி தவழும் மாநிலம் தமிழ்நாடு என்ற வரலாற்றை புரட்சித்தலைவி அம்மா உருவாக்கினார்.

ஆனால் இன்றைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கின்றது. இந்த அரசு தூங்கி கொண்டிருக்கிறது. காவல்துறையை முழுமையாக செயல்பட விடவில்லை. காவல்துறையை ஏவல்துறையாக்கி, எதிர்க்கட்சிகளை பழிவாங்க வேண்டும் என்று தான் விடியா தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இந்த அரசுக்கு சுத்தமாக கிடையாது. இருப்பவர்களை பொறுத்துத்தான் காவல்துறையின் நடவடிக்கை இருக்கும். நாங்கள் ஆட்சியிலிருந்த போது காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விட்டோம். அதனால் சட்டம், ஒழுங்கை பாரமரித்தார்கள்.

ஆனால் இன்றைக்கு காவல்துறை வெந்து போய், நொந்து போய், நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டுள்ளனர். ஸ்காட்லாண்டு காவல்துறைக்கு இணையாக எங்கள் ஆட்சியில் காவல்துறை இருந்தது. இன்றைக்கு காவல்துறை பரிதாப நிலைக்கு போய் விட்டது என்று வருத்தத்தோடு குறிப்பிடுகிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.