தற்போதைய செய்திகள்

சர்வாதிகாரி ஸ்டாலின் எங்கே போனார்?

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

திருச்சியில் ஒரு தி.மு.க பிரமுகர் அவர் மனைவிக்கு வாக்களிக்கவில்லை என்று அரிவாளை தூக்கிக்கொண்டு விரட்டி, விரட்டி சென்று வெட்டுகிறார். இப்போது சர்வாதிகாரி ஸ்டாலின் எங்கே போனார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

மாலை முரசு நாளிதழின் உரிமையாளர் ராமச்சந்திர ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சாலையில் உள்ள அவரின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

88-வது பிறந்த தினவிழா என்று சொல்லும் போது அவருடைய வாழ்நாளை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். ஒரு பத்திரிகையை நடத்துவது என்பது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. அது குறிப்பிட்ட நேரத்தில் வாசகர்களுக்கு கிடைக்க வேண்டும் அந்த ஒரு உன்னத எண்ணமும், அதே நேரத்தில் பத்திரிகையை பொறுத்தவரையில் எல்லா செய்திகளையும் தாங்கியிருக்க வேண்டும்.

எளிமையாக மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலே செய்திகள் இருக்கவேண்டும் என்ற இந்த மூன்று நிலைகளையும் சி.பா.ஆதித்தனாரின் வாரிசாக முழுமையாகப் பத்திரிக்கையைத் திறமையாக நடத்தி தமிழை வளர்த்த பெருமைக்குரியவர் என்றால் அது ராமச்சந்திர ஆதித்தனாரை இந்த நேரத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.

அதுமட்டுமல்ல ஒரு சமுதாய தொண்டிலும் சரி, வாழ்நாளில் எவ்வளவு காலம் நாம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல. ஆனால் வாழுகின்ற காலத்தில் நாம் எத்தகைய சாதனைகளைச் செய்தோம் என்பது தான் முக்கியம். அந்த வகையிலே வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவும், சமுதாயம் ஏற்றம் பெறுவதற்காகவும் பல்வேறு வகைகளிலே பெரும் தொண்டாற்றி வாழ்ந்து மறைந்து இன்றும் நம் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருப்பவர் ராமச்சந்திர ஆதித்தனார்.

அவர் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலும் சரி குறிப்பாக புரட்சித்தலைவரோடு, புரட்சித்தலைவி அம்மாவோடும் நல்ல நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் என்றால் ராமச்சந்திர ஆதித்தனாரை நிச்சயமாக சொல்ல வேண்டும்.

அவருடைய சமுதாய தொண்டு, தமிழுக்கு ஆற்றிய தொண்டின் காரணமாக அவர் வாழ்ந்து மறைந்த தெருவுக்கும் கூட அவரின் பெயரை சூட்டி குறிப்பாக அம்மா அவர்களே நேரடியாக 2011 -2016-ம் ஆண்டு கால கட்டத்திலே அவரே சென்று திறந்தார் என்பதை நான் இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிகாட்ட கடமைப்பட்டுள்ளேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி : போதைப்பொருட்கள் ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுக்கும் வகையில் முதலமைச்சர் உறுதிமொழியை தொடங்கி வைத்துள்ளார். இருந்தபோதிலும் தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருட்களின் நடமாட்டம் உள்ளது. இதனை தடுக்க அரசு தவறி விட்டதா?

பதில்: 100 சதவீதம் அளவு போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க தவறியது இந்த விடியா அரசு. ஆட்சி அதிகாரம் கையில் உள்ளது. ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

இதுதான் ஒரு முதலமைச்சர் செய்ய வேண்டிய வேலை. அவ்வப்போது நான் சர்வாதிகாரியாக மாறி விடுவேன் என்றால் எப்படி. ஏற்கனவே கட்சியினர் தப்பு செய்தார்கள். அப்போது உடனே நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். நான் சர்வாதிகாரியாக மாறி விடுவேன் என்று சொல்வார்.

அதனால் கட்சியினர் தவறு செய்யாமல் இருந்தார்களா. இன்றும் தொலைக்காட்சியை பாருங்கள். திருச்சியில் ஒரு தி.மு.க பிரமுகர் அவர் மனைவிக்கு வாக்களிக்கவில்லை என்று அரிவாளை தூக்கிக்கொண்டு விரட்டி, விரட்டி சென்று வெட்டுகிறார். இப்போது சர்வாதிகாரி எங்கே போனார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு முழுக்க, முழுக்க சீர்கெட்டு குட்டி சுவராகி விட்டது.

காரில் ஒரு பெண் செல்கிறார். காரோடு அந்த பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்கள். நேற்று ஒரே நாளில் மூன்று கொலைகள். கொலை கொலையா முந்திரிக்காய் என்பது போல தினமும் தமிழகத்தில் கொலை நடக்கிறது.

பத்திரிகையை எடுத்தாலே கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை, கட்ட பஞ்சாயத்து சர்வ சாதாரணமாக இந்த சர்வாதிகாரி ஆட்சியில் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.