எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சியை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள்

முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு
தூத்துக்குடி
தி.மு.க. ஆட்சியை கண்டு மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள். எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி எப்போது அமையும் என்று காத்திருக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறி உள்ளார்.
கோவில்பட்டி தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கோவில்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் புதிய சிமெண்ட் சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மருத்துவத்துறைக்கென்று பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்களை தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் வழங்கி வளர்ச்சி பெற்ற மருத்துவத்துறையாக தமிழகத்தை மாற்றிக்காட்டினார்.
அம்மாவின் மறைவுக்குப்பின் அம்மாவின் வழியை பின்பற்றி மருத்துவத்துறைக்கு பல்வேறு புதிய மருத்துவ உபகரணங்களை வழங்கும் திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்திக்காட்டி சாதனை படைத்தார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அம்மாவின் ஆட்சி பொற்கால ஆட்சியாகும். தற்போது நடைபெறும் திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டங்களையும் மக்களுக்கு செயல்படுத்தாமல் மவுனம் காத்து வரும் செயலை கண்டு மக்கள் அனைவரும் மனம் கொதித்து போய் இருக்கிறார்கள்.
மீண்டும் புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அமையாதா என்று ஏங்கும் நிலை தான் இன்று தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவர் மனதிலும் இருக்கிறது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ பேசினார்.