தற்போதைய செய்திகள்

நீட்தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபடும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி

திருவாரூர்

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபடும் என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்விற்காகவும், மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்விற்காகவும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று திருவாரூர் வருகை தர உள்ளார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆய்விற்காகவும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக நாளை (இன்று) முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திருவாரூர் வருகை தர உள்ளார். நீட் தேர்வை பொறுத்தவரை இந்த ஆண்டு ரத்து செய்வதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நேற்றைய தினமே மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபடும்.

டெல்டா மாவட்டங்களில் அச்சுறுத்தி வந்த ஓஎன்ஜிசி, கெயில் போன்ற நிறுவனங்கள் மூலம் எண்ணெய் எடுக்கும் திட்டங் களை முழுமையாக நீக்கி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த ஒரே முதல்வர் எடப்பாடிகே.பழனிசாமி ஆவார். இதில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் பாதுகாக்கப்பட்ட மண்டலத்தை மேலும் செம்மையாக்கும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், கூடுதல் ஆட்சியர் கமல் கிஷோர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.