தற்போதைய செய்திகள்

வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் உயிரிழந்த முதல்நிலைக்காவலர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ சொந்த நிதியில் இருந்து வழங்கினார்

தூத்துக்குடி

மணக்கரை வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் உயிரிழந்த பண்டாரவிளையை சேர்ந்த முதல்நிலைக் காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்தை தனது சொந்த நிதியில் இருந்து அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பேரூராட்சி பண்டாரவிளை கிராமத்தில் மணக்கரை வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் உயிரிழந்த முதல்நிலைக் காவலர் சுப்பிரமணியன் இல்லத்திற்கு வடக்கு மாவட்டச்செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ , மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்நந்தூரி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன் ஆகியோருடன் நேரில் சென்று மறைந்த காவலர் சுப்பிரமணியன் மனைவி புவனேஸ்வரிக்கு ஆறுதல் கூறி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை வழங்கினார்

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

இந்த மாதம் 18ம்தேதி மணக்கரை பகுதியில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி துரைமுத்து என்பவரை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையில் முதல் நிலை காவலர் சுப்ரமணியமும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மணக்கரை பகுதியில் ரவுடி துரை முத்து, பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று ரவுடி துரைமுத்துவை முற்றுகையிட்டு கைது செய்ய நடவடிக்கை எடுத்தபோது ரவுடி துரைமுத்து நாட்டு வெடிகுண்டை வீசியதில் சிக்கி படுகாயமடைந்து உயிரிழந்துள்ள முதல்நிலை காவலர் சுப்பிரமணியன் 2017ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்து துடிப்புடன் பணியாற்றி பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக துணிச்சலுடன் பிடித்ததுடன் சிறப்பாக செயலாற்றி காவல் கண்காணிப்பாளரிடம் பல்வேறு பாராட்டுச் சான்றிதழை பெற்றவராவார்.

அவரது இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெரும் இழப்பாகும். அவருடைய குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் முதல்நிலை காவலர் சுப்ரமணியன் மரணமடைந்ததை அறிந்தவுடன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, காவல்துறை தலைவரை நேரில் முதல்நிலை காவலர் சுப்ரமணியன் இல்லத்திற்கு அனுப்பி வைத்து அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள செய்ததுடன் முதல்நிலைக்காவலர் சுப்ரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யும் நிகழ்ச்சியை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்ததோடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தாயுள்ளத்தோடு முதல் நிலை காவலர் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

மேலும் அன்னாரது குடும்பத்தினருக்கு அரசு நிவாரண நிதியாக ரூ 50 லட்சம் வழங்கப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.அதனடிப்படையில் விரைவில் நிவாரணத் தொகையும் அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் முதல் நிலை காவலர் சுப்பிரமணியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.