பெரம்பலூர்

பெரம்பலூரில் குழந்தைகளுக்கு வைட்டமின் “ஏ” திரவம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டியில் நடைபெற்று வரும் வைட்டமின் “ஏ” திரவம் வழங்கும் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா குழந்தைகளுக்கு வைட்டமின் “ஏ” திரவத்தினை வழங்கினார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 6 மாதம் முதல் 5 வயது வரையிலான அனைத்து ஆண், பெண் குழந்தைகளுக்கு கண்பார்வை திறன், நிமோநியா காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்த்தாக்கத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஊட்டச்சத்து மிக்க வைட்டமின் “ஏ” திரவம் வழங்கப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 38,339 குழந்தைகளுக்கும், நகர்ப்புறங்களில் 5130 குழந்தைகளுக்கும் ஆக மொத்தம் 43,469 குழந்தைகளுக்கு வைட்டமின் “ஏ” திரவம் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இம்முகாமானது அனைத்து கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் மற்றும் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் ஏற்கனவே தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படும் மையங்களில் வைத்து வைட்டமின் “ஏ” திரவம் வழங்கப்பட உள்ளது. 6 மாதம் முதல் 1 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் “ஏ” திரவம் 1 மி.லி அளவிற்கும், 1 வயதிற்கு மேல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 20மி.லி அளவிற்கும் வழங்கப்பட உள்ளது. எனவே 6 மாதம் முதல் 5 வயது வரையிலான அனைத்து குழந்தைகளையும் அருகில் உள்ள வைட்டமின் “ஏ” திரவம் வழங்கும் மையத்திற்கு அழைத்துச் சென்று குழந்தைகளுக்கு வழங்கிடலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர்(சுகாதார பணிகள்) மருத்துவர் கீதாராணி, மாவட்ட மலேரியா அலுவலர் சுப்ரமணி, வட்டார மருத்துவ அலுவலர் சூரியகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்மோகன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.