சிறப்பு செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் ரூ.32.16 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

கடலூர்

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு ரூ.32.16 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.25.54 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைத்தார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தலைமை கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொலைதூர மருத்துவ சேவையின் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் உடல்நலம் குறித்து காணொலியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துரையாடினார்.

அதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, நிலஅளவை பதிவேடுகள் துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 25.54 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 33 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளிக்கல்வித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 32.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 22 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிகளில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.