தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய காங்கிரஸ் மேயர்-கும்பகோணம் மாநகராட்சியில் அதிர்ச்சி சம்பவம்

தஞ்சாவூர்
சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயர் தலைகீழாக ஏற்றிய சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முதல் மேயர் கே.சரவணன், துணை மேயர் சுப.தமிழழகன் மற்றும் ஆணையர் செந்தில் முருகன் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றினார். ஆனால் அப்போது தேசிய கொடி மேலே ஏற்றப்பட்ட பிறகு தான் கொடி தலைகீழாக இருப்பது தெரியவந்தது.
அதைக்கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக அருகில் இருந்த துணை மேயர் தமிழழகன் கொடியை விரைவாக கீழே இறக்கி அவசர, அவசரமாக சரியான முறையில் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்கள். பள்ளி மாணவ, மாணவிகள், மாநகராட்சி ஊழியர்கள் என பலரும் முகம் சுளித்தனர்.
கும்பகோணம் மாநகராட்சி முதல் மேயர் 75வது ஆண்டு நிறைவு சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய மேயர் கே.சரவணன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். ஆட்டோ ஓட்டுநராக இருந்த இவர் மேயராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.