தற்போதைய செய்திகள்

கழகத்தின் வெற்றிக்கு அயராது உழைப்போம் -முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சூளுரை

விழுப்புரம்,

கழகத்தின் வெற்றிக்கு அயராது உழைப்போம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சூளுரைத்தார்.

உள்ளாட்சி தேர்தல் குறித்து விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றிய கழகம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கழகம் தோல்வி அடையவில்லை. வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. எனவே வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலை நிர்வாகிகள் உற்சாகத்தோடு எதிர்கொண்டு அதிக இடங்களில் கழகம் வெற்றி அடைய பாடுபட வேண்டும்.

கழகத்தில் இருந்து வெளியே சென்றவர்கள் யாரும் பெரிய தலைவர்கள் அல்ல. அவர்கள் சென்றாலும் கழகம் தொடர்ந்து வெற்றி நடை போடும். ஒரு தோல்விக்கு பிறகு வரும் தேர்தல்களில் கழகத்திற்கு வெற்றி முகமாகவே இருந்தது என்பது வரலாறு. தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் ஒன்றிணைத்து செயல்பட்டு கழகத்தை வலுப்பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

கூட்டத்தில் வானூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, ஒன்றிய கழக செயலாளர்கள் ராமதாஸ், கண்ணன், நிர்வாகிகள் முருகன், கவுரி பாலகிருஷ்ணன், சேகர், குமரேசன், ஏழுமலை, தமிழ்மணி, சேதுபதி, பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.