தற்போதைய செய்திகள்

கூட்டுறவுத்துறை சார்பில் கோவில்பட்டி, உடுமலைப்பேட்டையில் புதிதாக பெட்ரோல், டீசல் விற்பனை மையம் திறக்கப்படும் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

சென்னை

கூட்டுறவுத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பெட்ரோல், டீசல் விற்பனை மையம் புதிதாக திறக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஆணைக்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் செயல்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்டது, தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான, இரசாயன உரங்கள், வேளாண் கருவிகள், விதை, பூச்சிகொல்லி மருந்துகள், உள்ளிட்டவைகள் சில்லரை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நீலகிரி மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களில் 18 மண்டல அலுவலகங்கள் செயல்படுகிறது. இவ்விணையத்திற்கு, 2011-12 முதல் ஜூலை 2020 வரை, இரசாயன உரம் (டி.ஏ.பி.) விநியோகத்திற்காக ரூ.746.38 கோடி வட்டியில்லா முன்பணமாக தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

4,352 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் 38,53,002 மெட்ரிக்டன் உரங்கள், ரூ.5,077.74 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பாமணி உர ஆலை மூலம், ரூ.161.31 கோடி மதிப்பிலான 94,756 மெ.டன் குருணை வடிவிலான கலப்பு உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, ரூ.164.889 கோடி மதிப்பிலான 91,466 மெ.டன் உரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதோடு, வேலூர், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் உள்ள கலப்பு உர அலகுகளில் 1,17,507 மெ.டன். கலப்பு உரங்கள், ரூ.90 கோடிக்கு உற்பத்தி செய்யப்பட்டு, 1,15,901 மெ.டன். கலப்பு உரங்கள் ரூ.99.27 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், ரூ.72.26 கோடிக்கு விதை, பூச்சிகொல்லி மருந்து மற்றும் விவசாயக் கருவிகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் PACS மூலம் நெல், மிளகாய் மற்றும் மக்காச் சோளம் போன்ற விளைப்பொருட்களை, டான்பெட் மண்டல அலுவலகங்கள் கூட்டுக் கொள்முதல் முறையில் கொள்முதல் செய்கின்றன. ஆவின் நிறுவனத்திற்கு தேவையான கால்நடை தீவனங்கள் விற்பனை செய்யப்படுகிறது. 2011-12 முதல் ஜூலை 2020 வரை, 2,83,139 மெ.டன். அளவிலான வேளாண் விளைபொருட்கள் மற்றும் கால்நடை தீவனங்கள் ரூ.604.49 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் தேவையின் அடிப்படையில், நேரடி கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டிற்கு மத்திய அரசால் அரவை கொப்பரை கிலோ ரூ.99.60-க்கும் பந்து கொப்பரை ரூ.103 க்கும் ஆதார விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் வெளிச்சந்தையில் ரூ.100 மற்றும் ரூ.110 என்ற விலையில் கொப்பரை கொள்முதல் நடைபெறும் நிலையில், ரூ.125 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சரால், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இவ்விணையத்தின் சார்பில், சென்னையில், கோயம்பேடு மற்றும் பேசின் பிரிட்ஜ் ஆகிய இடங்களில் குளிர்பதன கிடங்குகள் நிறுவப்பட்டு, காய்கறி மற்றும் பழம் உள்ளிட்டவை சேமித்து வைக்க வாடகைக்கு விடப்படுகிறது. இதன் மூலம் 2011 முதல் ஜூலை 2020 வரை ரூ.5.31 கோடி வாடகை வருமானம் ஈட்டியுள்ளது. அதுபோல, இவ்விணையத்தால் நடத்தப்படும் 7 பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் மூலம் நடப்பாண்டில், ரூ.25.57 லட்சம் நிகர லாபமும், இந்தியன் ஆயில் நிறுவனத்திடமிருந்து ரூ.16.24 லட்சம் மாத வாடகையாகவும் பெற்றுள்ளது.

மேலும், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் வரவு செலவுகள் மற்றும் அன்றாட நடவடிக்கைகள் யாவும், கணினிமயமாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இதன் பலனாக, 2006-07-ம் ஆண்டில் ரூ.41.27 லட்சம் நடப்பு நட்டத்திலும், ரூ.3,832.16 லட்சம் குவிந்த நஷ்டத்திலும் செயல்பட்டு வந்த இவ்விணையம் புரட்சித்தலைவி அம்மா ஆட்சியின் சிறப்பான செயல்பாடுகளால் 2018-19-ம் ஆண்டின் தணிக்கை அறிக்கையின்படி ரூ.1,017.28 லட்சம் நிகர லாபத்தில் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் முனைவர் எல்.சுப்பிரமணியன், சிறப்பு பணி அலுவலர் முனைவர் க.ராஜேந்திரன், கூடுதல் பதிவாளர்கள் கு.ரவிக்குமார், து.அமலதாஸ், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய மேலாண்மை இயக்குநர் எம்.முருகன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.