தற்போதைய செய்திகள்

அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்துவதில் விடியா தி.மு.க. அரசு தோல்வியடைந்துள்ளது

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை

கொலை, கொள்ளை கூடாரமாகி விட்டது தமிழகம் என்று கூறி உள்ள முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்துவதில் விடியா தி.மு.க. அரசு தோல்வியடைந்து விட்டது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளின் சார்பில் நடைபெற்ற சுதந்திர விழாவில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றினார்.

இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

நேற்றைக்கு கூட வங்கியில் மிகப்பெரிய கொள்ளை நடைபெற்றுள்ளது. ஏறக்குறைய ரூ. 20 கோடி அளவுக்கு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சென்னை தமிழகத்தின் தலைநகரமாக உள்ளது. ஆனால் இன்றைக்கு சென்னை தமிழகத்தின் கொள்ளை நகரமாக, கொலை நகரமாக மாறி விட்டது என்பது தான் இந்த சுதந்திர தினத்தில் வருத்தப்படக்கூடிய ஒரு விஷயமாக இருக்கின்றது.

கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து இவை அனைத்தும் சர்வசாதாரணமாக நடக்கும் ஒரு
மாநிலம் இருக்கின்றது என்ற அளவுக்கு இந்த சுதந்திர தின விழாவில் நான் சொல்லக்கூடிய விஷயம்.

இதற்கு முன்னர் அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி காலத்திலும் சரி, அம்மாவின் அரசு இருந்த காலத்திலும் சரி ஒரு தனி மனித பாதுகாப்பு, தனி மனித உரிமை, சட்டம் ஒழுங்கை சீர்கேடு செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி சட்டத்தின் ஆட்சியை செய்தார்கள். ஆனால் இன்றைக்கு அதுபோன்ற நிலை இல்லை.

ஒரே நாளில் மூன்று அல்லது நான்கு கொலை என்று பத்திரிகையில் செய்தி வருகிறது. இப்படி கொள்ளை கூடாரமாகவும், கொலை கூடாரமாகவும் தமிழகம் இருக்கின்றது. அடிப்படை கட்டமைப்பு வசதியில் இந்த விடியா அரசு கவனம் செலுத்துகிறதா என்று சொன்னால், அடிப்படை கட்டமைப்பு வசதியில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது.

மழை நீர் சேமிப்பு திட்டத்தை அம்மா ஒரு மக்கள் இயக்கமாகவே கொண்டு வந்தார். ஆனால் இந்த விடியா திமுக அரசு இதனை எல்லாம் தூக்கிபோட்டு விட்டது. மழை நீரைக்கூட சேமிக்கவில்லை.

மழை பொய்யாத நேரத்தில் கூட கடலூர், சிதம்பரத்தில் வெள்ளம் வந்தது. காவிரி நீர் பெருக்கெடுத்து வரும்போது அதன் கிளை ஆறுகள், நதிகள், வாய்க்கால்களை முறையாக தூர்வாரப் பட்டிருந்தால் இந்த நிலை இருந்திருக்காது.

அம்மா ஆட்சிக் காலத்திலும் சரி, எடப்பாடியார் ஆட்சியிலும் சரி முறையாக தூர் வாரப்பட்டது. இதனை முறையாக பராமரிப்பு செய்திருந்தால் 12 டிஎம்சி தண்ணீர் கடலில் சென்று வீணாக சென்றதை நாம் தடுத்திருக்க முடியும். கடலில் செல்வதை தடுக்க முடியாத இந்த அரசு, மழை நீரை சேமிக்க முடியாமல் கடலுக்கு அனுப்பி விட்டது.

பருவமழை தொடங்கும் இந்த சூழ்நிலையில் சென்னையில் ஒரு பணி கூட நடைபெற்றதாக தெரியவில்லை. வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இந்த விடியா தி.மு.க அரசு எடுக்கவில்லை.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.