கரூர்

கரூர் மாவட்டத்தில் கூடுதலாக மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கரூர்

கரூர் மாவட்டத்தில் கூடுதலாக மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட போத்துராவுத்தன்பட்டி ஊராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களுக்காக, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், கொரோனா வைரஸ் தொற்று பரவும் விதம் குறித்தும், அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் விதம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், அங்கிருந்த அனைவருக்கும் கபசுரக் குடிநீரை வழங்கினார். மேலும் சுகாதாரத் துறையின் மூலம் அப்பகுதி மக்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் வகையில் நடத்தப்பட்ட பரிசோதனைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார்.

அப்பகுதியில் ஏற்கனவே மூன்று நாட்களுக்கு வீடு வீடாகக் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டுள்ள நிலையில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட கபசுரக் குடிநீரை மேலும் 3 நாட்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறை மற்றும் வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.

இந்த நிகழ்வின்போது ஊராட்சிகளுக்கு அந்த உதவி இயக்குநர் உமாசங்கர், வட்டார மருத்துவ அலுவலர் ஷகீலா, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மகுடீஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.